ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் ஒன்று கூடி நடத்திய பொன்விழா கொண்டாட்டம்!
தர்மபுரி:
ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் ஒன்று கூடினால் என்ன வரும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குதூகலம் வரும். உற்சாகம் ஊஞ்சல் கட்டி ஆடும் என்பதை சென்ற 2ஆம் தேதி ஞாயிறு அன்று மாரண்ட அள்ளி சபரி மஹாலில் கண்கூடாய் காண முடிந்தது. காலை 10 மணிக்கு குத்து விளக்கேற்றி இறை வணக்கத்துடன் தமிழ் வாழ்த்துடன் மங்களகரமாய் தொடங்கிய நிகழ்ச்சி மாலை வரை நீடித்தது. மாரண்ட அள்ளி அரசினர் உயர் நிலைப் பள்ளியில் 1972 – 73ஆம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவ மாணவியர் தங்களுடைய பசுமை நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார்கள்.
“பிரம்பெடுக்கா பெருந்தகை” எங்கள் பெரியசாமி ஆசிரியர் என்று அவர்கள் தங்கள் குருநாதருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். மாணவச் செல்வங்களின் அன்பில் நெகிழ்ந்த ஆசிரியர் மாணவர்களை வாழ்த்திப் பேசியதுடன் பள்ளி நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அந்த நாள் மாணவர் அந்தமானில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் மாணிக்கவேலு தலைமையில் நடைபெற்ற இப்பொன் விழா வைபவத்தில் மாணவர்களுக்கும் உள்ளூர் பிரமுகர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மாணவர்களில் இருவர் இராஜா மற்றும் அமர்நாத் நிகழ்ச்சி நெறியாளர்களாய் செயல்பட்டு நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். சொர்கமே என்றாலும் அது மாரண்ட அள்ளி போல வருமா என்று பாட்டு கட்டி வந்து பாடி சிறப்பித்த அமர்நாத் எல்லோருடைய இதயங்களையும் கவர்ந்தார். பசுமை நிறைந்த நினைவுகளே பாடலோடு நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. தகடூர் கலைக் குழுவினரின் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி தோற்றத்தில் வந்த காதல் டூயட் பாடல் காட்சிகள் கூட்டத்தை கலையாமல் பார்த்துக் கொண்டது.