சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் ராச்குமார், வெள்ளையம்மாள்,முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி மற்றும் பலர் நடித்து ஜனவரி 3ல் வெளியாகும் படம் பாயாஸ்கோப்.
கதை
சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்றது. அதே சமயம், தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் கிராம மக்களை வைத்துக்கொண்டு முழு படத்தையும் எடுத்த இயக்குநர் சங்ககிரி ராச்குமார் பற்றி பாராட்டி பல கட்டுரைகளை பல பத்திரிகைகள் வெளியிட்டது. அதில், ”இவர்கள் படம் எடுத்த கதையை ஒரு படமாக எடுக்கலாம்”, என்று பிரபல வார இதழ் ஒன்று குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, ‘வெங்காயம்’ என்ற கதை எழுத தூண்டுதலாக இருந்த சம்பவம் தொடங்கி, அந்த கதைக்கான குறும்படம் எடுப்பதற்கான பணத்தை தனது தந்தையிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து பெற்றது, பிறகு தானே அந்த கதையை படமாக எடுக்க முயற்சித்தது, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி, அதற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்துயும் விற்று இறுதியில் ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடமான நிலத்தை விற்று படத்தை வெளியிட்டது என தான் படம் எடுத்த கதையை அதிக வலியுடனும், கொஞ்சம் கலகலப்புடனும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார் சொல்லியிருப்பதுதான் ‘பயாஸ்கோப்’ படம்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராச்குமார், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், ஹீரோயினாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு தான் இயக்கிய திரைப்படத்தின் சில காட்சிகளையும், அப்படத்தின் மூலம் தான் கடந்து வந்த சில கசப்பான மற்றும் கலகலப்பான சம்பவங்களை மீண்டும் காட்சிப்படுத்தி அதையே ஒரு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார், தனது முந்தைய பட பாணியிலேயே கிராமத்து மனிதர்களை கதையின் மாந்தர்களாக்கி, திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு எந்தவிதமான சினிமா சாயமும் பூசாமல் மீண்டும் ஒரு எதார்த்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை ’பயாஸ்கோப்’ மூலம் பதிவு செய்திருக்கிறார். பாராட்டுக்கள்.