Take a fresh look at your lifestyle.

#seesdaw Movie Review

8

சீசா’ திரைப்பட விமர்சனம்
குணா சுப்ரமணியம் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், நட்டி நடராஜ், ஆதேஷ்பாலா மற்றும் பலர் நடித்துவெளியாகியிருக்கும் படம் சீசா                  கதை
இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் மாயமாகி விடுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது. பாடினியின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக, வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் நட்டி நட்ராஜுக்கு, அதிர்ச்சிகரமான உண்மையும், பாடினியின் நிலையும் தெரிய வருகிறது. அது என்ன ?, அதன் பின்னணியில் இருப்பது யார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், அமைதியான போலீஸாக இருந்தாலும், விசாரணையில் அதிரடி காட்டுகிறார். எந்த ஒரு விசயத்தையும் கூர்ந்து கவனித்து விசாரணை மேற்கொள்ளும் அவரது செயல்திறன் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுக்கிறது.
இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமுடன் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.
நிஷாந்த் ரூசோவின் மனைவியாக நடித்திருக்கும் பாடினி குமார், கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹோம்லியான முகம், இயல்பான நடிப்பு என்று கவனம் ஈர்ப்பவர் ஒரு பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்து அசத்துகிறார்.
நிஷாந்தின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, வீட்டில் வேலை செய்பவராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ், கார்த்தியாக நடித்திருக்கும் நடிகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காதல் பாடல் மற்றும் சிவன் பற்றிய பாடல் என்று அனைத்து பாடல்களும், பாடல் வரிகளும் மனதில் நிற்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறது.
கிரைம் திரில்லர் ஜானர் கதை என்றாலும் அதன் பின்னணியில் இயக்குநர் சொல்லியிருக்கும் மெசஜை மக்களிடம் சிறப்பாக கடத்தியிருக்கும் படத்தொகுப்பாளர் வில்சி ஜெ.சசி, திரைக்கதையின் திருப்பங்களை மிக சரியாக தொகுத்து படம் முடியும் வரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார்.
தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட, சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதை தன் கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருந்தாலும் அதை கிரைம் திரில்லர் ஜானரில் மட்டும் இன்றி காதல் காட்சிகளையும் சேர்த்து கலர்புல்லான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
பல திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை மற்றும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிக்க காட்சிகளுடன் படத்தை சுவாரஸ்யமாக  நகர்த்திச் செல்லும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், கதை சொல்லில் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் மேக்கிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பாராட்டுக்கள்.