Take a fresh look at your lifestyle.

’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்பட விமர்சனம்!

149

சென்னை:

தெலுங்கு மொழியில் மாபெரும்  வெற்றியைப் பெற்றஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயாஎன்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்படம். நடிகர் சந்தானம் மற்றும் ரியா சுமன் இருவரும் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், இவர்களுடன் ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E.ராமதாஸ், ‘அருவி’ மதன், ஆதிரா, இந்துமதி, ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில், ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்தவர்தான்  சந்தானம்.  ஆனால் குடும்பச் சூழல் காரணமாக இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனாலும் இந்துமதியையும், மகனையும் தன் வீட்டிலேயே வேலைக்காரி என்று பொய் சொல்லி தங்க வைத்திருக்கிறார் ஜமீன்தார்.

அந்த வீட்டில் வேலைக்காரியாக இருப்பதினால் சந்தானமும், அவரது தாயும் ஜமீன்தாரின் மனைவியின் மூலமாக பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த ஊரை விட்டு வெளியேறும் சந்தானம், அவர் தங்கி இருக்கும் அந்நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கிறார்.  சிறு வயதில் இருந்தே, துப்பறிவதில் ஆர்வம் காட்டி வரும் சந்தானம், இளம் வாலிபனான பின்பு ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துவக்கி நடத்தி வருகிறார். இதனிடையில் தன்னுடைய தாயின் மரண செய்தி அறிந்து ஊருக்கு கிளம்புகிறார். ஊருக்கு செல்வதற்குள் அவருடைய தாயின் இறுதி சடங்கை சந்தானம் இல்லாமல் செய்து முடித்து விடுகின்றனர். அதன்பின்னர் தந்தை ஜாமின்தாரின் சொத்தில் இரண்டாம் மனைவிக்கும் பங்கு இருப்பதால், இவரும் அதற்காக அந்த கிராமத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இந்த சூழலில் சந்தானம் தங்கி இருக்கும் ஊருக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளம் இருக்கும் சில பகுதிகளில் அவ்வபோது சில பிணங்கள் கிடக்கின்றன. அந்த உடல்களை யாரும் உரிமை கோராததால் அனாதை பிணங்களாக கருதி புதைக்கும் காவல்துறை, மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் யார் என்பதை விசாரிக்காமல் விட்டுவிடுகிறது. நடந்த கொலைகளை தற்கொலை என்று  காவல்துறை முடிவெடுத்ததால், அங்கு தங்கியிருக்கும் நாட்களில்,  இந்த  அனாதை பிணங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க சந்தானம் முயலுகிறார்.அப்போது சந்தானம் தேடி செல்லும் நபர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுவதோடு, அவரை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன.அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, அனாதை பிணங்களின் பின்னணியில் இருக்கும் குற்றங்களை சந்தானம் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் மீதிக் கதை!

இப்படத்தில் வழக்கமான சந்தானத்தை பார்க்க விரும்புகிறவர்களுக்கு அவருடைய நடிப்பு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.  இருந்தாலும், அவரை புதிய கோணத்தில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.  நகைச்சுவையே இல்லாமல் சீரியஸான வேடத்தில் நடித்தாலும், சில இடங்களில் தனது வழக்கமான நக்கல் நையாண்டி காமெடி வசனங்கள் மூலம் நம்மை சிரிக்கவும் வைக்கிறார். ஒரு மெடிக்கல் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்கும்  துப்பறிவாளனாக சந்தானம் நடித்திருந்தாலும்,  தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. தாயை இழந்து வாடும் மகனாக, அடிக்கடி அவரது கனவில் வரும் தாயை நினைத்து வேதனைபடும் எமோஷனல் காட்சிகளில் சந்தானம் மிக  சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக  நடித்து இருக்கும்  ரியா சுமன், ஏதோ பெரிய வரவேற்பை பெறுவார் என்று நினைத்தால், அவருடைய கதாபாத்திரம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் ஒன்றும் இல்லாமல் போவது பெரும் ஏமாற்றம்தான்.

முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், ஈ.ராமதாஸ், குரு சோமசுந்தரம், ஆதிரா, இந்துமதி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இருவரும் வித்தியாசமான முறையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் பல காட்சிகள் தெளிவில்லாமல், இருட்டிலேயே எடுத்திருப்பது ஏன் என்றே தெரியவில்லை.யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கலாம்.

இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கம்  ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே கொடுத்து விட்டது. தெலுங்கு மொழியில் வெளி வந்த ஒரிஜினல் கதையான  ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயாபடம் நல்ல நகைச்சுவை கலந்து கடைசிவரையிலும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பிலும் வித்தியாசத்தை கையாண்டிருந்தால், கதையை தெளிவாக சொல்லியிருந்தால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில், ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ரசிகர்களுக்கு விருந்தை கொடுக்குமா? என்பது ஐயம்தான்.

திரைநீதி செல்வம்.