சென்னை:
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ என்ற புதிய தமிழ் இணைய தொடர் OTT யில் வெளியாகி இருக்கிறது. மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் லிவ்விங் டுகெதர் மற்றும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘பானி பூரி’ இணையத்தொடரில் லிங்கா, ஜம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, ஸ்ரீகிருஷ்ண தயாள், கோபால், வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – நவ்நீத் சுந்தர், ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, படத் தொகுப்பு – பி.கே., ஒலி வடிவமைப்பு , கலவை – ராஜேஷ் முக்கத், தயாரிப்பு வடிவமைப்பு – சரவணன் வசந்த், உடைகள் – தீபிகாஷி, நிர்வாக தயாரிப்பு – செல்லதுரை, கிரியேட்டிவ் தயாரிப்பு – கருப்பையா சி.ராம்,
கதாநாயகன் லிங்காவும், கதாநாயகி சாம்பிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இருவரும் காதலித்தாலும் திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று லிங்கா ஆசைப்படுகிறார். இந்த சூழ்நிலையில் சாம்பிகாவின் தோழியின் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்கள் எல்லோருமே ஏமாற்றுகாரர்கள் என்று நினைக்கிறார். காதல், அன்பு எல்லாம்போலியானது, திருமணம் ஆன பிறகு மாறிவிடும்…என்று நினைத்து குழப்பமடைகிறார் சாம்பிகா. இதனால் லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.
இதனால் வேதனையடைந்த லிங்கா, சாம்பிகாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு இந்த விஷயம் சாம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது. உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இளங்கோ குமரவேல், காதலர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல், லிவிங் டூ கெதர் முறையில் எழு நாட்கள் வாழ வேண்டும், இந்த ஏழு நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம், இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். சில நிபந்தனைகளுடன் சம்மதிக்கும் சாம்பிகா, ஏழு நாட்களுக்குப் பிறகு லிங்காவை விட்டு பிரிந்தாரா? அல்லது அவரை மணந்தாரா? என்பது தான் ‘பானி பூரி’ தொடரின் கதை.
ஏற்கனவே பல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த லிங்கா, காதலை மையப்படுத்திய ஒரு தொடரில் மிக இயல்பாகவும், மிக சிறப்பாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். காதலிக்கும் போது எதற்கும் கவலைப்படாத ஜாலியான இளைஞராக நடித்திருப்பவர், தனது காதலி எதிர்ப்பார்க்கும் சிறிய விஷயத்தில் வழக்கமான ஆண்களின் மனநிலையோடு யோசிக்கும் காட்சியில் அட்டகாசமாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார்.
ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சாம்பிகாவின் நடிப்பு பரவாயில்லை. அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கலாம்.
இன்றைய இளம் ரசிகர்களுகேற்றவாறு வெளிபடைவான தந்தையாக இளங்கோ குமரவேல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.,நண்பனாக வரும் வினோத் சாகர் , கனிகா , கோபால் , ஸ்ரீ கிருஷ்ணா தயாள் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
குடும்ப அனுமதியோடு ஒரு லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை மையப்படுத்திய இணையத் தொடரை கண்ணியமாகவும், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு தொடராகவும் கொடுக்க முடியும் என்பதை இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இத்தொடரின் மூலம் நிரூபித்திருக்கிறார். கதாபாத்திரங்களை பேச வைத்தே எட்டு பாகங்களை படமாக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால் இயக்குநராக சிந்தித்ததை விட, எழுத்தாளராக அதிகம் சிந்தித்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதை முழுவதையும் கட்டிடங்களுக்குள் வைத்தே காட்சிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வித்தியாசமான முயற்சியாக இசையமைத்திருக்கும் இவர் இந்த இணைய தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ’பானி பூரி’ இணைய தொடரை அனைத்து ரசிகர்களும் ரசிக்கலாம்.
திரைநீதி செல்வம்