சீசன் சினிமா சார்பில் யாழ் குணசேகரன் கதை எழுதி இயக்கி இருக்கும் படம் தான் “கெழப்பய” . இப்படத்தில் கதாநாயகனாக கதிரேச குமார் மற்றும் விஜயரணதீரன், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்தராஜ், கே என் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதியவர் கதிரேச குமார் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றுகிறார். தன் பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியில் அவரது கிராமத்தின் சிறிய பாதையில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு கார் வருகிறது. இந்த காரில் ஒரு கர்ப்பிணி பெண்ணுடன் 5 பேர் வருகிறார்கள். அந்த கார் வரும் பாதை குறுகலாக இருப்பதால் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் கதிரேச குமாரை, காரில் உள்ளவர்கள் வழி விடும்படி சொல்கிறார்கள். ஆனால் முதியவர் அவர்கள் சொல்வதை சிறிதும் பொருட்படுத்தாமல் எதையும் தனது காதில் வாங்கிக் கொள்ளாமல் காருக்கு வழிவிடாமல் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்.
காரில் வருபவர்கள் அந்த முதியவர் கதிரேச குமாரை வழிபடும்படி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் தனது சைக்கிளில் காருக்கு முன்னே சென்று கொண்டிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த காரில் வந்தவர்கள் முதியவர் கதிரேச குமாரை அடித்து தாக்குகிறார்கள். அவரை தாக்கும் போது அந்த கிராமத்தில் இருக்கும் ‘விஏஓ’ உறியடி ஆனந்தராஜ் அதனை தடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனாலும் அந்த முதியவர் கதிரேச குமார் அந்த காரின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விடுகிறார். அந்த காரை போகவிடாமல் தடுத்து நிறுத்தி, தன்னுடைய சைக்கிளுடன் அந்த சிறிய பாதையிலேயே அமர்ந்து விடுகிறார். அவர் ஏன் அந்த காருக்கு வழி விடாமல் தடுக்கிறார்? காரில் வருபவர்களுக்கும் முதியவர் கதிரேச குமாருக்கும் என்ன பிரச்சனை? என்பதுதான் “கெழப்பய” படத்தின் மீதி கதை.
வயதான முதியவராக நடித்திருக்கும் கதிரேச குமார், தன்னால் முடிந்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். அந்தப் படம் முழுவதும் ஒரு சில வசனங்களை மட்டுமே பேசி தன் முக பாவனையில் மூலம் காட்சியின் தன்மையை உணர்ந்து, வயதானவர் வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
‘வீஏஓ’ வாக நடித்திருக்கும் உறியடி ஆனந்தராஜ் மற்றும் விஜயரணதீரன், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, கே என் ராஜேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
இப்படத்தின் இடைவேளை வரை எதற்காக காரை தடுக்கிறார் என்பதை கேள்விக்குறியாக இருப்பதால் இடைவேளைக்குப் பிறகு அவர் ஏன் காரை தடுத்தார்…அந்த காரில் வந்தவர்களிடம் ஏன் அடி வாங்கினார்? என்பதை பார்க்கும்போது கதிரேச குமார் மீது நமக்கு பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால் இடைவெளிக்குப் பிறகு படத்தில் சற்று தொய்வு ஏற்படுவது கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.
திரைப்படம் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் எடுத்திருக்கும், இப்படத்தில் ஒரு சாதாரண சம்பவத்தை மைய கருத்தாக வைத்துக்கொண்டு இயக்குநர் யாழ் குணசேகரன், சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இப்படத்தை கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.
மொத்தத்தில் “கெழப்பய” படம் எல்லா ரசிகர்களும் பார்த்து மகிழ வேண்டிய படம்.
திரைநீதி செல்வம்.