மசாலா பாப்கார்ன் உடன் ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது!

சென்னை:

மசாலா பாப்கார்ன் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஐஸ்வர்யா கூறுகையில், “இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தேன். தயாரிப்பு,நிர்வாகத்தை சிறந்த முறையில் கற்று  அனுபவம் பெற வெங்கட் பிரபு நிறுவனம் பெரிதும் உதவியது. எனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பாப்கார்ன்’ தொடங்கும் எண்ணம் ஏற்பட்டபோது ,தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன்.

தயாரிக்கும் முதல் படம் என்பது ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிறப்பானதும் மிகவும் முக்கியமானது ஆகும். மசாலா பாப்கார்னில், உருவாகும் திரைப்படம் படம் காண்பவர் உள்ளம் நிறையும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும்,ஏதாவது ஒருவகையில் படம் காண்பவர்களை படம் தொடர்பு படுத்தவேண்டும், சிரிக்க வைக்க வேண்டும், அழ வைக்க வேண்டும், குறைந்தது ஒரு தருணத்திலாவது  அந்தப் படத்தோடு நம்மை ஒன்ற வைக்க வேண்டும்,அவ்வாறான படங்களைத்தான் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவ்வாறான படமாக மசாலா பாப்கார்னுக்கு  ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் சரியான தருணத்தில் வந்தது.

படத்தின் பெயருக்கு ஏற்றாற்போல் நட்பே எங்களை இணைத்து  எல்லாம் சரியாக நடந்தது. எங்கள் நட்பிலுள்ள நம்பிக்கையே எங்களை இவ்வளவு தூரம் கடத்திக் கொண்டு வந்து படத்தை முடிக்க உதவியது. விரைவில் படம் வெளியாக உள்ளது. மசாலா பாப்கார்ன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான நண்பன் ஒருவன் வந்த பிறகு  #NOVP, திரைப்படத்திற்காக ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைவதில் பெருமை கொள்கிறோம். படம் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

கதையாசிரியரும் நடிகரும், இயக்குநருமான ஆனந்த் கூறும்போது, “ஐஸ்வர்யா மற்றும் அவரது மசாலா பாப்கார்ன் நிறுவனம் எனக்கும், எங்கள் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்துக்கும் கிடைத்தது மிகச் சிறந்ததாக கருதுகிறேன். எந்த ஒரு படைப்பாளியும் தன்னை முழுவதுமாக நம்பும் ஒரு தயாரிப்பாளரும், தயாரிப்பு நிறுவனமும் வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடன் நின்று சிறந்ததைச் செய்யத் தூண்டுவார்கள்.தயாரிப்பாளர்  ஐஸ்வர்யா மற்றும் மசாலா பாப்கார்ன் நிறுவனம் எதிர்பார்த்ததை விட எமது  தேவையை முழுமையாக நிறைவேற்றித் தந்தார்கள்”.

படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இதன் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. ‘NOVP’ திரைப்படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது ! படத்தைப் போலவே நிஜத்திலும் மசாலா பாப்கார்ன் மற்றும் ஐஸ்வர்யா மேம் ஆகியோருடனான நட்பு பயணம் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் நம்பிக்கை உள்ளது என்றார்.

படம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கூறியதாவது, “’சென்னை 28’ படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்தப் படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி! சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது. இந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு எனக்கு அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யாவுக்கு நன்றி! ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் உங்கள் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம்! விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டு தருவோம்! நண்பர்கள் அனைவருக்காகவும் நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது” என்றார்.

பல அற்புதமான ஆச்சர்யங்களுடன், ஒரு சிறந்த பயணத்தை எதிர்நோக்குகிறோம் என்றும் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

"Nanban Oruvan Vantha Piragu" NEWSFeatured
Comments (0)
Add Comment