இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், ஈழத்தில் நடந்த இன அழிப்பின் பின்னணியை கதைக்களமாக கொண்டு, உலகளவில் நடக்கும் இன அழிப்பு சம்பவங்களை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இயக்குநர் கென் கந்தையா இயக்கியிருக்கும் படம் தான் ‘பேர்ல் இன் தி பிளட்’. (PEARL IN THE BLOOD)
கனடா வாழ் ஈழத்தமிழரான கென் கந்தையா, ஏற்கனவே ஆங்கிலத்தில் ‘ரோமியோ ரொமான்ஸ்’ (ROMEO ROMANCES) என்ற திரைப்படம் இயக்கியிருக்கிறார். வெவ்வேறு தம்பதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த ரொமாண்டிக் ட்ராமா ஆகிய பிரிவுகளின் கீழ் அமெரிக்காவில் விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடந்த இன அழிப்பை உலக மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற முயற்சியாக இயக்குநர் கென் கந்தையா, இன அழிப்பு சம்பவங்களில் இதுவரை திரைப்படங்களில் சொல்லப்படாத சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, த்ரில்லர் ஜானரில் இயக்கியிருக்கும் ‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) படத்தில் பிரபல தமிழ் நடிகர் சம்பத் ராம், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் கல்பனா ஸ்ரீ, ஷாலினி மலர், ஜெயசூர்யா மற்றும் புதுமுகங்கள் பலர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சிங்கள பேரா மிலிட்டரி தலைவராக நடித்திருக்கும் சம்பத் ராம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். அவரது நடிப்பு வெகுவாக பேசப்படும். அதேபோல் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் ஜெயசூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களை தவிர மற்றவர்கள் புதியவர்களாக இருந்தாலும், அதில் காட்வின் என்ற இளைஞர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த நடிகரகள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, இவர்களுடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருப்பதாக இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் படம் பற்றி கூறிய இயக்குநர் கென் கந்தையா,
”இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் சொல்லும் ஒரு படமாக மட்டுமே இப்படம் இருக்காது. உலக அளவில் நடக்கும் இன அழிப்பை பேசும் ஒரு படமாக இருக்கும். ஈழத்தில் நடந்த இன அழிப்பு பற்றி பல படங்கள் பேசியிருந்தாலும், அங்கு நடந்த ”ஒயிட் வேன் ஸ்டோரி” என்பதை இதுவரை எந்த படத்திலும் காட்சிப்படுத்தியதில்ல. அதாவது, பதிவு எண் இல்லாத, வெள்ளைநிற பலகை கொண்ட வாகனத்தில் வந்து அப்பாவி தமிழ் மக்களை கடத்தி சென்று கொலை செய்வார்கள். வாகனத்தில் வந்தவர்கள் யார்? எதற்காக மக்களை கடத்தி சென்றார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்காததால், கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதியும் கிடைக்காது. நீதிபதியும், நீதியும் இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு மிக கொடூரமானது. இப்படி ஒரு கொடூரமான இன அழிப்பு சம்பவங்கள் இலங்கையில் மட்டும் அல்ல சில அரபு நாடுகளிலும் நடந்துக்கொண்டிருந்தது. அதை பார்த்து தான் இலங்கையிலும் சுமார் 40 வருடங்களாக இப்படி ஒரு முறையை கடைபிடித்து வந்தார்கள், இன்னமும் இந்த முறை மூலம் அங்கு இன அழிப்பு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.
‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) திரைப்படத்தில் சொல்லப்படும் இன அழிப்பு சம்பவங்கள் அனைத்தும் இலங்கையில் 2008-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவங்களாகும். இந்த படம் வெளியானால் தமிழ் உணர்வாளர்களிடத்தில் மட்டும் இன்றி உலகத்தில் உள்ள மனித உணர்வாளர்கள் அனைவரிடத்திலும் பெரிய தாக்கம் ஏற்படும். அதற்காக தான் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் ஒடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
செவன்ஹில் பிக்சர்ஸ் யுனிவர்சல் மூவிடோன் (SEVENHILL PICTURES – UNIVERSAL MOVIETONE) நிறுவனம் சார்பில் இயக்குநர் கென் கந்தையா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சதிஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செஞ்சு லக்ஷ்மி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கணேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்ற, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளை ராண்டிராஜ் கவனித்துள்ளார். 5.1 மிக்ஸிங்கை சுரேஷ் கவனிக்க, லைன் தயாரிப்பாளராக ஜெயசூர்யா பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘பேர்ல் இன் தி பிளட்’. (PEARL IN THE BLOOD) திரைப்படம், முன்னணி ஒடிடி தளத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்!