‘ரேசர்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

பள்ளியில் படிக்கும் போது  தனது சைக்கிளை வேகமாக ஓட்டும் காலத்திலேயே பைக் ரேஸராக வரவேண்டும் என்ற கனவோடு வளர்கிறார் கதாநாயகன் அகில் சந்தோஷ். . ஆனால் அவர் பெரியவனாக வளர்ந்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக தான் விரும்பியபடி மோட்டார் சைக்கிள் வாங்க முடியவில்லை. அதன்பின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு கார் கம்பெனியில் வேலைக்கு செல்கிறார் அகில் சந்தோஷ். .அவர் வேலைக்கு சேர்ந்ததும் மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாத தவணையில் மூன்று லட்சத்திற்க்கு மேல் லோன் போட்டு மோட்டர் பைக் வாங்குகிறார்.

ஆனால் தனது வீட்டில் பெற்றோர்களிடம் தனது நண்பனின் மோட்டார் பைக் என்று பொய் சொல்லி ஏமாற்றுகிறார்.  இந்த சூழ்நிலையில் அவருடைய தந்தை வீட்டுக் கடனை அடைக்க தன் மகன் அகில் சந்தோஷிடம்  அவனது அலுவலகத்தில் லோன் போடும்படி வேண்டுகிறார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள ஆசைப்பட்ட அகில் சந்தோஷ் வீட்டுக் கடனை அடைத்தாரா? மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா?  என்பதுதான் ‘ரேசர்’ படத்தின் மீதி கதை!.

கதாநாயகனாக நடித்திருக்கும் அகில் சந்தோஷ் முதல் படத்திலேயே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புதுமுகம் போல் இல்லாமல் மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும்  நடித்திருக்கிறார். நல்ல உடற்கட்டு கதாநாயகனுக்கு உரித்தான அழகிய முகம், அவரது உயரத்திற்கு ஏற்றவாறு முடி அழகு இவை அனைத்தும் ஒருங்கே அமைந்து இருக்கிறது. தந்தைக்கு பயந்து ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞனாக வலம் வரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, குறைவான காட்சிகளில் சிறிது நேரம்  வந்தாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூர்த்தி, தனக்கு கொடுத்த வேலையை யதார்த்தமாக மிக சிறப்பாக செய்து நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் சரத், நிர்மல் மற்றும் சதீஷ் ஆகியோரின் கதாபாத்திரமும், நடிப்பும் சூப்பர். வில்லனாக நடித்திருக்கும் அரவிந்த், நாயகனின் பயிற்சியாளராக நடித்திருக்கும் அனீஷ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் பார்வதி என அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாக செய்து, குறையில்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கதைக்கு ஏற்றபடி பைக் ரேஸ்ஸிற்கு தேவையான விறுவிறுப்பை பரபரப்பான காட்சிகள் மூலம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பாராட்டுக்களை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரபாகர்.

இசையமைப்பாளர் பரத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மோட்டார் பைக் ரேஸில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்காக கதை, திரைக்கதை எழுதி  குடும்ப உறவுகள் மத்தியில் காதலையும் இணைத்து,  நடுத்தர குடும்பத்து இளைஞனின் மன போராட்டங்களை மிக அழுத்தமாகவும் அதே சமயம் ஜாலியாகவும் சொல்லி படத்தை ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் அவர்களை பாராட்டலாம். தந்தை – மகன் இடையே நடக்கும் பல உணர்வுகளை திரைக்கதையின் மூலம் காட்சிகளை மிக இயல்பாக காட்சிப்படுத்தி படத்திற்குபெரிய  பலம் சேர்த்திருக்கிறார்.

மொத்தத்தில்  விறுவிறுப்பு நிறைந்த “ரேசர்” படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்,.

திரைநீதி செல்வம்.

 

"RESAR" MOVIE REVIEW.Featured
Comments (0)
Add Comment