நந்தகிஷோர் இயக்கத்தில் நிவேதா தாமஸ், விஷ்வதேவ் பாசம், மாஸ்டர் அருண், பிரியதர்ஷி புல்லிகொண்டா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 35
சின்ன விஷயம் இல்ல.
கதை
எந்த எண்களையும் பூஜ்ஜியத்துடன் பெருக்கினால் பூஜ்ஜியம் கிடைக்கும். பூஜ்யத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. கணிதத்தில் இந்த விதிகள் எல்லாம் ஏன் இருக்கிறது என்று நாம் பள்ளியில் படிக்கும் போது கேள்வி கேட்டிருப்போமா? இப்படி கேள்வி கேட்கும் சிறுவன் பள்ளியில் சந்திக்கும் பிரச்சனைகளை இன்றைய சம கால கல்வி தளத்தில் சொல்லும் ஒரு சிறந்த படமாக தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் படம் 35 சின்ன விஷயம் இல்ல.
திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாவது படிக்கும் அருணுக்கு கணிதம் என்றாலே அலர்ஜி. கணிதத்தில் பூஜ்ஜியம் பற்றி கேள்வி கேட்கிறான். கணித மதிப்பெண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறது. கணிதம் எடுக்கும் ஆசிரியர் மாணவர்களை வாங்கும் மதிப்பெண்களை வைத்து அழைக்கிறார். நன்றாக படிக்கும் மாணவர்களை அருணிடம் பழக கூடாது என்கிறார். அருணை ஜீரோ என்றழைக்கிறார்.அருணின் அப்பா அம்மா இது குறித்து கவலை கொள்கிறார்கள். கணிதம் வராததால் அருணை திருமலையில் உள்ள வேத பாடசாலையில் சேர்க்க முயல்கிறார் அப்பா. இதில் அருணின் அம்மாவிற்கு விருப்பம் இல்லை. இதனால் அருணின் அப்பா அம்மாவுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது. பள்ளி அருணை ஐந்தாம் வகுப்புக்கு டீ ப்ரோமோட் செய்கிறது. மேலும் வரும் முழு ஆண்டு தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பள்ளியில் தொடர முடியும் என்று கண்டிஷன் போடுகிறது. பத்தாவது கூட படிக்காத அருணின் அம்மா தான் முதலில் கணிதம் படித்து விட்டு அருணுக்கு கணித பாடம் சொல்லித் தருகிறார். அருண் முழு ஆண்டு தேர்வில் 35 மார்க் எடுத்தானா? அல்லது மார்க் எடுக்காமல் அப்பா சொன்னது போல் வேதம் படிக்க சென்றானா? என்பதே படத்தின் மீதிக்கதை
அப்பாவாக வரும் விஷ்வதேவ் பாசம், ரொமான்ஸ், கண்டிப்பு என கலந்து சரியான விகிதத்தில் நடிப்பை தந்துள்ளார். நிவேதா தாமஸ், இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக சிறப்பாக நடித்துள்ளார். மாஸ்டர் அருண்தேவ் மிக சிறப்பாக நடித்துள்ளார். கணக்கு வாத்தியாராக வரும் பிரியதர்ஷி புல்லிகொண்டா, நாம் படிக்கும் போது பார்த்த பல கணக்கு வாத்தியாரை நினைவில் கொண்டு வருகிறார். K. பாக்யராஜ் அவர்கள் பள்ளி முதல்வராக சிறப்பாக நடித்துள்ளார்.மற்றும் இதில் நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். விவேக் சாகரின் இசை ரசிக்கவைக்கிறது.ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நாம் பள்ளியில் படித்த நாட்களையும், படிக்கும் காலத்தில் நம்மில் பலர் கணிதத்தில் பட்ட அவஸ்தைகளையும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.மிக சிறந்த திரைப்படம் தந்ததற்கு அறிமுக இயக்குநர் நந்தகிஷோர் அவர்களை மனமாற பாராட்டலாம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.