‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

கல்கி வார இதழில் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல தயாரிப்பாளர்கள் முயற்சிகள் செய்தனர். அந்த சமயத்தில் பலவித புராண படங்களும், சரித்திர படங்களும்  நிறைய வந்துக் கொண்டிருந்ததால் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமெடுப்பதை கைவிட்டு விட்டனர். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க நினைத்தார்.  அவரே தனது டைரக்ஷனில், அந்தப் படத்தை உருவாக்க பல பத்திரிகைகளில்  விளம்பரம் செய்தார். ஆனால் அவராலும் அப்படத்தை எடுக்க முடியவில்லை. அதன் பிறகு உலக நாயகன் கமலஹாசன் இந்த நாவலை படமாக்க முனைப்புடன் இருந்தார். ஆனால் எவருமே ‘பொன்னியின் செல்வன்’  படத்தை பலவித காரணங்களால் எடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான ‘பொன்னியின் செல்வன்’ கதையை இயக்குனர் மணிரத்னம் சிறப்பான முறையில்  திரைக்கதை அமைத்து நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார்.  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் கதையை பலரும் படித்து இருந்தாலும், அதை இயக்குனர் மணிரத்னம் எப்படி இயக்கி இருப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதையைப் பற்றி கூற வேண்டுமென்றால் இதோ அப்படத்தின் விமர்சனம்.

தஞ்சையை ஆளும் சோழ நாட்டு சாம்ராஜ்யத்தின் அரசரான சுந்தர சோழனுக்கு உடல் நலமின்றி இருக்கும்போது, அடுத்து முடி சூட்டுவதற்காக மகன்கள் ஆதித்ய கரிகாலன், அருண்மொழி வர்மன் என்ற இரண்டு மகன்களும், குந்தவை ஒரு மகளும் இருக்கின்றனர்.  தஞ்சையில் இருந்து வெளியேறி பல்வேறு தேசங்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்ய கரிகாலன். இதற்கிடையே, தஞ்சை அரியணையை கைப்பற்றுவதற்காக,  தன் தந்தையின் அரச சபையில் சில பிரச்சனைகள் வரப் போவதை அறிந்துக் கொண்டதை  உணர்ந்து கொண்டு, தன் தந்தை சுந்தர சோழனுக்கு எப்படியாவது  இந்த செய்தியை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நண்பன் வந்தியதேவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

இதற்கிடையில் கடம்பூர் அரண்மனையில் சோழ படையில் இருக்கும் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் சுந்தர சோழரின் அண்ணன் கண்டராதித்தரின் மகன்  மதுராந்தகனை அரசராக்க முயற்சி நடக்கிறது. அவர்களுக்கு பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினி உதவி செய்கிறார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக உருவெடுத்திருக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்துகொள்ளும் இளவரசி குந்தவை, ஆதித்ய கரிகாலனின் நண்பன் வந்தியதேவன் உதவியோடு, தனது சகோதரர்கள் இருவரையும் தஞ்சைக்கு வரவழைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடிவு செய்கிறார். ஆனால் பெரிய பழுவேட்டரையரும், நந்தினியும் சூழ்ச்சி செய்து இலங்கையில் இருக்கும் அருண்மொழி வர்மனை தஞ்சைக்கு அழைத்து வர படைகளை அனுப்புகின்றனர். இந்த படைகளிடம் வந்தியத்தேவன் சண்டைப் போட்டு சிக்கிக் கொள்கிறார். அதே சமயத்தில் அருண்மொழி வர்மனும் அங்கு வந்து சண்டையிடுகிறார். அந்த  படைகளிடமிருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மீதிக் கதை.

ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம், அவரது அமர்க்களமாக, ஆக்ரோஷமான நடிப்பிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும்  படத்தை விறுவிறுப்பாக நடிப்பில் நகர்த்தி இருக்கிறார். தன்னை காதலித்து ஏமாற்றிய காதலி நந்தினியை நினைத்து ஏங்கி உருகுவதும், பின்னர் தன்னை பழி தீர்க்கும் நந்தினிக்கு எதிராக ஆவேசப்படுவதும், சோழ அரசிற்கு எதிராக நடக்கும் சதி திட்டங்களை முறியடிக்க முயல்வது போன்ற பல காட்சிகளில் உயிரோட்டமான உணர்ச்சிகளுடன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய விதம்  அற்புதமாக இருந்தது. அவரது அட்டகாசமான நடிப்பு அனைவரையும் கைத் தட்ட வைக்கிறது.

வந்தியத்தேவனாக நடித்திருக்கும்  கார்த்தி,எதற்கு அஞ்சாமல் சோழ சாம்ராஜ்ஜித்திற்காக தன் உயிரை பணயம் வைத்து ஒவ்வொரு இடமாக சென்று வசியப்பேச்சினால் தன் நடிப்பில் அனைவரையும் கவர்கிறார்.  பெண்களிடம் காதல் பார்வையுடன் பேசும் வசனம், நடனம், சண்டை, என்று பரபரப்பாக காட்சிகள் இவரை வைத்து தான் நகர்கின்றன. இறுதிக் காட்சியில் பெரிய கப்பலில் நடக்கும் சண்டை காட்சியில் முழுதிறமையையும் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

அருள்மொழிவர்மனான பொன்னியின் செல்வனாக கதையின் நாயகன் ஜெயம் ரவி இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் என்றாலும் தன் கம்பீரத்தாலும், ஆளுமையாலும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசருக்கு உண்டான தோற்றத்துடன் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்  உடல் தோற்றத்தை மாற்றி   நடித்திருக்கும் ஜெயராம் தலைமுடி ஸ்டைல், நடை, உடை என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நந்தினியாக அழகாக,  மயங்கச் செய்யும் பார்வையுடன் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பளிச்சிடுகிறார். குந்தவையாக வரும் த்ரிஷா, தன் கம்பீர உடல்  அழகிலும்  சிறந்த நடிப்பிலும்,  தந்தையிடம் பொறுமையாக பேசுகின்ற பாசம் என்று சோழ அரசை காப்பற்ற தன் புத்தி கூர்மையோடு எடுக்கும் முடிவு என அழகு தேவதையாக ரசிகர்களின் மனதை சிதற அடிக்கிறார்.

பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்துக்கு சரத்குமாரின் தோற்றம் மிகப் பொருத்தமாக அமைந்து இருக்கிறது. , சிறிய பழுவேட்டைரையர் வேடத்தில் நடித்திருக்கும் பார்த்திபன், சுந்தர சோழராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் என படத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது பணியை சிறப்பாக திறம்பட செய்திருப்பதோடு, அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக பொருத்தமாக இருக்கிறார்கள்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மூலக் கதையிலிருந்து விலகாமல் ஐந்து பாகங்களை வைத்து, மக்களுக்கு புரியும்படி மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் திரைக்கதை அமைத்து இரண்டு பாகமாக சுருக்கி,  திரைப்படமாக எடுக்க பல ஆண்டு கால உழைப்பில் படாதபாடு பட்டு வெளியே கொண்டு வந்து இருக்கிறார்கள். ‘பொன்னியின் செல்வன்’ என்ற இந்த பெரிய நாவலை ஒரு திரைப்படமாக, கதையின் அளவை குறைத்து எடுக்க பலர் முயற்சி செய்து இருந்தாலும், அந்த கதையை மாற்றி எழுதி, மிக லாவகமாகக் கையாண்டிருக்கும்  இயக்குனர் மணிரத்னம் படம் பார்க்கும் அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்ககளும், பின்னணி இசையும் படத்தின் கதையை  உணர்ந்து சிறப்பாக அமைத்து இருக்கிரார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்,  கடல் கொந்தளிப்பில் கப்பல் சண்டைக் காட்சிகள், போர்க் காட்சிகள், நடனக் காட்சிகள் போன்ற பல காட்சிகளை ஹாலிவுட் படத்திற்கு நிகராக ஒளிப்பதிவில் சிறப்பு செய்து இருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணி தன் கை வண்னத்தில் உருவான அரங்குகள்  நம் கனவை மெய்பட வைத்து இருக்கிறது.

உலகத் தமிழர்கள் கொண்டாடும் விதத்தில்பொன்னியின் செல்வன்சரித்திர நாவலை  திரை காவியமாக உருவானதற்கு,  இலங்கை தமிழரான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரனும், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமும்,  பல கோடிகள்  பொருட்செலவு செய்து படத்தை எடுத்த அவர்களை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அனைத்து ரசிகர்களையும் மிரள வைத்து விட்டது.

 

 

 

"PONNIYIN SELVAN" MOVIE REVIEWFeatured
Comments (0)
Add Comment