காவல்துறையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உளவு பார்ப்பதற்காக தனியாக ஒரு போலீஸ் படையை அமைக்கிறார்கள். இந்நிலையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வாவுக்கு, குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும் பணி வழங்கப்படுகிறது. இதற்கிடையே பலர் அனாதை இல்லத்தில் இருந்து பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து, அந்த குழந்தைகளை ஒரு கும்பலிடம் விற்பதற்காக கடத்துகிறது. இந்த சூழலில் அதர்வாவின் அண்ணன் தத்தெடுக்கும் பெண் குழந்தையை ஒரு கும்பல் கடத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து அந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வாவுக்கு, அந்த கும்பல் செய்யும் குற்ற செயல் குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால் அந்தக் கும்பலை பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அது தொடர்ச்சியாக வேறு பல தொடர்புகளுடன் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தக் கும்பலை ஆதாரத்துடன் பிடிக்க முயலுகிறார். அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வா, அதை எப்படி செய்கிறார் என்பதே ‘ட்ரிகர்’ படத்தின் கதை.
தமிழ் திரைப்படத்தின் அழகு நாயகனாக வலம் வரும் அதர்வா, தனது சிறப்பான நடிப்பால் பன்முக திறமையை வழங்கி நிரூபித்து காட்டி இருக்கிறார். ஒரு இளம் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அதர்வா மீண்டும் ஒரு ஸ்டைலான காவல்துறை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்…மற்றும் தனது அதிரடி காட்சிகள் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். அப்பா மீது சுமந்த களங்கத்தை நீக்கத் தந்தை வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கும் ஒரு பாசமான மகனாக நடிப்பில் ஜொலிக்கிறார்.
கதாநாயகி தான்யா ரவிச்சந்திரனுக்கு காதல் காட்சிகளும் பாடல்களும் இல்லை என்றாலும், திரைக்கதைக்குத் தேவையான காட்சிகளில், அந்தப் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லனான நடித்திருக்கும் பாலிவுட் வரவு ராகுல் தேவ் ஷெட்டி ஆரம்ப காட்சியில் மிரட்டலாக எண்ட்ரி கொடுத்தாலும், நடிப்பு எடுபடவில்லை. அதர்வாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் அருண் பாண்டியன், ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
அம்மாவாக சீதா, போலீஸ் கமிஷனராக அழகம் பெருமாள், அண்ணனாக கிருஷ்ண குமார், அண்ணியாக வினோதினி வைத்தியநாதன், மற்றும் அண்டர்கிரவுண்ட் போலீசாக முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் அந்தந்த பாத்திரங்களில் கச்சிதமாக இருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசையில் பாடல் கேட்டு இரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் குறைவாக அமைந்திருக்கலாம்.கிருஷ்ணன்வசந்த் ஒளிப்பதிவில் காட்சிகளின் அதிர்வு வெளிப்பட்டிருந்தாலும். ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டு சிறந்த முறையில் பிரமிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
இதுவரை காவல்துறை பற்றி சொல்லப்படாத திருப்பங்கள் நிறைந்த ஒரு விஷயத்தை, திரைக்கதையில் ஒரு சில குறைபாடுகள் இருந்தபோதிலும், சுவாரஸ்யமாக கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்,
மொத்தத்தில், ‘ட்ரிகர்’ வேகம் நிறைந்த காட்சிகள் உள்ள ஒரு ஆக்ஷன் படம்.