‘டைரி’ – திரைப்பட விமர்சனம்!

சப் இன்ஸ்பெக்டர் பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார். அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் ‘டைரி’.

காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான பார்வை நிதான நடை ஆகியனவற்றைக் காதல் நேரத்திலும் கடைபிடிக்கிறார். வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்து அதில் தானும் ஒரு பாத்திரம் என்று அறியும்போதும், கடைசிக்காட்சியில் அம்மா பாசத்தில் தணிகை அழும்நேரத்திலும் கண்களாலேயே அவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்திப் பாராட்டுப்பெறுகிறார் அருள்நிதி. காவல்துறை உதவிஆய்வாளராக வரும் நாயகி பவித்ராமாரிமுத்து நல்வரவு. எடுப்பும் மிடுக்குமாக இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.

காவலராக நடித்திருக்கும் சாம்ஸ், பேருந்துப்பயணியாக வருகிற ஷாரா ஆகிய இருவருக்கும் மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு.அதை உணர்ந்து சிரிக்க வைக்கிறார்கள் ஊட்டி மலைப்பாதையில் நடக்கும் ஒரு பேருந்துப் பயணமே படத்தின் மையம். அப்பேருந்தில் வரும் சதீஷ்கண்ணன், ஜெயலட்சுமி தம்பதியர் அவர்களின் குழந்தைகளாக வரும் சிறுவன் ஜெய்ஸ்வந்த் சிறுமி பிரஜுனா சாரா, இளம்பெண் ஹரிணி, நக்கலைட்ஸ் தனம்,ரஞ்சனா நாச்சியார், கொலைகாரர்களாக வரும் சுரேந்தர் தாகூர், சூரஜ்பாப்ஸ், அகோன்,தணிகை,பவித்ரன், அப்பேருந்தின் ஓட்டுந்ராக வரும் புகழேந்தி நடத்துநராக வரும் மாதேஸ்வரன் காதல் இணையராக வரும் ருத்ரா, சோனியாசுரேஷ் ஆகிய அனைவரும் தத்தம் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டும் வரும் கிஷோர், செந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நன்று. படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவு. அதிகமான இரவுக்காட்சிகள், பேருந்துக்குள் சண்டைக்காட்சிகள் ஆகியனவற்றை அழகாகப் படம்பிடித்துப் பலம் சேர்த்திருக்கிறார் அரவிந்த்சிங்.

ரான் ஈதன் யோகனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் படத்தின் கதைக்களத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார். ஒரு சிக்கலான கதையை புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் புது இயக்குநர் இன்னாசி பாண்டியன்.அதன் மையப்புள்ளி முற்றிலும் மூடநம்பிக்கை சார்ந்து இருப்பது நெருடல். மற்றபடி, பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வித்தையில் அருள்நிதி, இன்னாசிபாண்டியன் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தத்தில் ‘டைரி’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.

" Diary"MOvie ReviewFeatured
Comments (0)
Add Comment