வட்டார வழக்கு திரைவிமர்சனம்
மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, சிவா மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘வட்டார வழக்கு’.
கதை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக காழ்ப் புணர்ச்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒருவரையொருவர் வெட்டி சாகிறார்கள் இப்படி சென்றிருக்கும் கதையில் ஒரு அழகான காதல் இந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் கிராமத்தில் உள்ள மக்களையே சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் . இதுவே இப்படத்திற்கு பெரிய பலம் என்று சொல்லலாம். இவர்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் நம்மை ஒரு லைவ் கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது. ரவீனா ரவி இதற்கு முன்பு லவ் டுடே, மாமன்னன் உட் பட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இந்த வட்டார வழக்கு படத்தில் மண்ணின் பெண்ணாக, கிராமத்து டீச்சராக, தொட்டிச்சி கதா பாத்திரத்தில் ஒரு சிறந்த நடிப்பை தந்துள்ளார். இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் ஏற்கனவே டுலெட் படத்தில் நடித்தவர். இப்படத்தில் ஒரு முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
இளையராஜா இசையில் காதல், கிராமம் என வாழ்வியலை உணர்த்தும் விதமாகவும் உணர்வுகளை சொல்லும் படமாகவும் கொடுத்துள்ளார்
இளையராஜா, சில இடங்களில் எந்த வித பின்னணி இசையையும் தராமல் உணர்வுகளின் வலியை சரியாக தந்து விடுகிறார். பின்னணி இசையில் தான் எப்போதும் முன்னனிதான் என்பதை நிரூபித்து விடுகிறார் இளையராஜா. படத்தின் கதை 1987 கால கட்டத்தில் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் ராஜாவின் இசையில் வெளியான சில பாடல்கள் அவ்வப்பொழுது பின்னணியில் ஒலிக்கிறது. இதுவும் கூட நன்றாக உள்ளது. சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் வெப்பம் தெரிகிறது.
மாற்று சினிமாவை விரும்புபவர்களுக்கும், ஒரு யதார்த்த படத்தை ரசிப்பவர்களுக்கும் வட்டாரவழக்கு சரியான தேர்வாக அமையும்.
இயக்குநர் கண்ணுசாமி ராமசந்திரனுக்கு பாராட்டுக்கள்.