ஸ்ருதிஹாசன் அப்பாவிடம் சொல்லாமல் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார். இவர் வருவதை தெரிந்துகொண்ட ஒரு கும்பல் இவரை கடத்த நினைக்கின்றனர். இதை தெரிந்து ஸ்ருதிஹாசனை பிரபாஸிடம் ஒப்படைக்கும் பொறுப்பை மைம்கோபியிடம் கொடுக்கிறார்.
அஸ்ஸாமில் உள்ள டினுசுகியா கிராமத்தில் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகே தன் அம்மாவுடன்(ஈஸ்வரி ராவ்) வசித்து வருகிறார் தேவா என்கிற கட்அவுட்(பிரபாஸ்). வன்முறையில் ஈடுபட மாட்டேன் என அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்ததை காப்பாற்றி வருகிறார் பிரபாஸ். அவ்வப்போது பிரபாஸூம் அவரது அம்மாவும் ஒவ்வொரு இடமாக மாறி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஆபத்தில் இருக்கும்
ஸ்ருதி ஹாசனை எதிரி கும்பலிடம் இருந்து காப்பாற்ற, அவரை பிரபாஸிடம் அனுப்பி வைக்கிறார் மைம்கோபி. கோபி சொன்ன வார்த்தைக்காக அம்மாவின் எதிர்ப்பையும் மீறி ஸ்ருதியை தன்னுடன் தங்க வைக்கிறார் பிரபாஸ்.
அம்மா வாங்கிய சத்தியத்திற்காக வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபாஸுக்கு பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கிறார் பிரபாஸ். ஒரு கட்டத்தில், ஸ்ருதிக்கு ஆபத்து நெருங்க, பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்தை அவரது அம்மா திரும்பி வாங்க, பிரபாஸ் எதிரிகளை துவம்சம் செய்கிறார்.
பிருத்வி ராஜூக்கும் பிரபாஸ்க்கும் என்ன தொடர்பு, அம்மா பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்திற்கு என்ன காரணம், இதில் ஸ்ருதி ஹாசனை ஏன் கடத்த நினைக்கிறார்கள்?
இதற்கிடையே கன்சார் நகரில் தன் மகன் வர்தாவை(ப்ரித்விராஜ்) தன் வாரிசாக அறிவிக்க ஏற்பாடு செய்கிறார் ராஜா மன்னார்(ஜெகபதி பாபு). அந்த முடிவை எதிர்த்து மன்னாரின் அமைச்சர்களும், ஆலோசகர்களும் சேர்ந்து சதி செய்கிறார்கள்.
இந்நிலையில் வெளிநாட்டு ஆட்களையும் அழைத்து வர பிரச்சனை பெரிதாகிறது. இதற்கிடையே ராஜா மன்னார் இல்லாத நேரத்தில் கன்சார் நகரை கவனிக்கும் பொறுப்பை பெற்ற அவரின் மகள் ராதாவோ அந்த சாம்ராஜ்ஜியத்தின் 101 பிரிவை சேர்ந்தவர்கள் வாக்களிக்க உத்தரவிடுகிறார். இந்த இக்கட்டான நேரத்தில் தன் சிறுவயது நண்பன் பிரபாஸை அழைக்கிறார் பிரித்விராஜ். பிரபாஸ் வந்து நண்பன் பிரித்விராஜ்க்கு என்ன செய்தார்?
கான்சார் எனும் சாம்ராஜ்யம் உருவானது எப்படி? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்களே சலார் படத்தின் மீதிக்கதை!
தேவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் அருமையாக நடித்திருக்கிறார். அப்பாவியாகவும் சரி, ஆக்ரோஷமாகவும் சரி சண்டை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். வர்தாவாகவே வாழ்ந்திருக்கிறார் ப்ரித்விராஜ்.
ஸ்ருதி ஹாசன் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். முதல் பாதியில் தான் ஸ்ருதியை அதிகம் பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை புரிந்து நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயா ரெட்டி, ராமசந்திரா ராஜு, மது குருசாமி, ஜான் விஜய், மைம் கோபி ஆகியோரின் நடிப்பும் அருமை.
ரவி பன்சூரின் இசை படத்தினை ரசிக்கவைக்கிறது. புவனின் கேமரா மிரட்டி இருக்கிறது.
கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல் இந்த படத்தையும் வெற்றிபடமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.