CHENNAI:
‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியா மணி, மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.
ராணுவ வீரரான ஷாருக்கான், விக்ரம் ரத்தோர் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான ஹீரோ வாக அதிரடி காட்டுகிறார். தீவிர வாதிகளை தாக்கி அழிக்கச் செல்லும் ஷாருக்கான் படையினர் திடீரென்று கையில் வைத்தி ருக்கும் மிஷின் துப்பாக்கி வேலை செய்யாமல் போய்விட சாதுர்யமாக முயன்றுஅங்குள்ள தீவிரவாதிகளை அழிக்கும் அவர் பின்னர் துப்பாக்கிகள் சரியான நேரத்தில் சுடாமல் போனதுபற்றி ராணுவ கோர்ட்டில் புகார் அளிக்கிறார். அந்த புகாரின் அடிபடையில் துப்பாக்கி தயாரித்த தொழில் அதிபர் விஜய் சேதுபதியை அழைத்து விசாரித்து கம்பெனியின் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறார்கள். அந்த கோபத்தில் ஷாருக்கானை விஜய்சேதுபதி, பழி வாங்க காத்திருக்கும்போது ராணுவ மேலதிகாரிகளை தன் கையில் போட்டுக்கொண்டு தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, அவரை கடத்தி விமானத்திலிருந்து கீழே தள்ளி கொன்று விடுகிறார்கள்.
இந் நிலையில் அவரது மனைவி தீபிகா படுகோனே, தனது கணவர் ஷாருக்கானை கொலை செய்ய வந்தவர்களை சண்டையிட்டு கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். கர்ப்பமாக இருக்கும் அவருக்கு சிறையில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையிடம் தனது அப்பாவை பற்றி சில விபரங்களை சொல்லி, நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் அப்பாவின் மீது சுமந்தப்பட்ட குற்றத்தை பொய் என்று நிரூபித்து, அவர் யார்? என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார். வளர்ந்து பெரியவன் ஆகும் மகன் ஆசாத் என்ற ஷாருக்கான், தன் அம்மாவுக்கு செய்துக்கொடுத்த சத்தியத்தை காப்பாற்றினாரா? அப்பா விக்ரம் ரத்தோர் என்ற ஷாருக்கானை கொன்ற விஜய்சேதுபதியை பழி வாங்கினாரா? என்பதையும், அரசியல்வாதிகளால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அவல்ங்களையும் மையமாக வைத்து, அதிரடி ஆக்ஷன் படமாக அட்லீ இயக்கி இருக்கும் படம்தான் ‘ஜவான்’
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாருக்கான் ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சிகள் போன்ற அனைத்திலும் தன் சிறப்பான நடிப்பால் எல்லோரையும் கவர்கிறார். பாடல் காட்சிகளில் ரசிகர்கள் தியேட்டரில் கைத்தட்டி ஆரவாரம் செய்து, அவர்களும் எழுந்து நடனம் ஆடும் அளவிற்கு தன் உடல் அசைவுகளை காண்பித்திருக்கிறார்.இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும், ஷாருக்கான் அவருடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கொடுத்து இருக்கிறார். வயதான தோற்றத்திலும் சரி, இளமையாக வயதிலும் சரி தனது நடிப்பில் பட்டையை கிளப்பி அசத்தி உள்ளார்.
சிறப்பு படை அதிகாரி கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் கதாநாயகி நயன்தாரா மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளில் மட்டும் இல்லாமல் காதல் காட்சிகளிலும் தனது நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
ஆயுதங்கள் சப்ளை செய்யும் தொழிலதிபராக விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் வித்தியாசமான வெளுத்த தாடி, மீசையுடன் தனது தோற்றத்தை மாற்றியமைத்து நடிப்பில் மிரட்டியிருக்கிறார்
தீபிகா படுகோனே அழகாக வந்து அருமையாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்து இருக்கிறார். அவருக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் அனைவரின் கண்களையும் கலங்க வைத்து விடுகிறார். அவருடைய வேடமும், அதில் அவர் நடித்த விதமும் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது. ஷாருக்கானுடன் வரும் பிரியாமணி, மற்றும் ஐந்து பெண்களின் கதாபாத்திரமும் நன்றாக மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்துள்ளனர். சஞ்சய் தத் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தி இருக்கிறார்.
நமது நாட்டில் பெரிய, பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் செய்யும் மோசடிகளின் பின்னணியை தோலுரித்து காட்டும் வகையில் இயக்குநர் அட்லீ மற்றும் எஸ்.ரமணகிரிவாசன் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள், 40 ஆயிரம் ரூபாய் கடனுக்காக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள், 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாத தொழிலதிபர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்வது ஏன்? என்ற கேள்வியோடு படத்தை ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் தான் சொல்ல வந்ததை ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இயக்கியிருக்கும் அட்லீக்கு கண்டிப்பாக கைத்தட்டல் கொடுக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் சமூக அக்கறையுடன் திரைப்படத்தை இயக்கி இருக்கும் அட்லீக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரன்டும் காட்சிகளின் வேகத்தை அதிகரிக்க செய்திருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இசை அமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, ஒவ்வொரு காட்சியையும் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தாலும், காட்சிகளில் இருக்கும் உயிரோட்டத்தை மிக நேர்த்தியாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஜவான்’ திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
திரைநீதி செல்வம்.