Take a fresh look at your lifestyle.

“போர் தொழில்” – திரை விமர்சனம்!

144

சென்னை:

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘போர் தொழில்’ என்ற  இப்படத்தைதயாரித்திருக்கின்றன.

இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல், பி.எ ல்.தேனப்பன், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். பத்திரிகை தொடர்பு – யுவராஜ். அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார்.

கொடூரமான கொலைகளை மையமாக வைத்து பல  க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்கள் வந்திருந்தாலும், இந்த படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷ் வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறார்கள்.

குடும்ப சூழ்நிலை  காரணமாக விருப்பம் இல்லாமல் காவல்துறை அதிகாரியாக அசோக் செல்வன் பணியாற்றுகிறார். திருச்சியில் தொடர்ந்து இளம்பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். உள்ளூர் போலீசால் அந்த கொலைகளை கண்டுபிடிக்க முடியாமல்போனதால்  வழக்கை விசாரிக்க சென்னையில் இருந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீஸான சரத்குமார் வருகிறார்.  அந்த வழக்கு விசாரணையில் காவல் துறை அதிகாரி சரத்குமாருக்கு உதவியாளராக அசோக் செல்வன் செல்கிறார். இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே,  தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. து. அந்த தொடர் கொலை வழக்கை கையில் எடுக்கும் அசோக் செல்வனும், சரத்குமாரும் கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘போர் தொழில்’ படத்தின் மீதிக் கதை.

காவல்துறை அதிகாரியாக சரத்குமார் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் புதிதாக இருப்பது அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வலம்வரும் அவர் தனது நடிப்பு அனுபவம் என்ன என்பதை காட்டியுள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களிடம் பேசப்படும் அளவிற்கு, தனக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்.

தாடி மீசை இல்லாத காவல்துறை அதிகாரியாக பயந்த சுபாவம் கொண்டவர் எப்படி இருப்பார் என்பதை தனது நடிப்பு மூலம் கண் முன் நிறுத்துகிறார் அசோக் செல்வன்.  பயம்,  நடுக்கம், தடுமாற்றம் என இளம் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்துள்ள நிகிலா விமலும் காவல் துறையிலேயே பணி புரிகிறார். காதல் பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும், கதாநாயகியாக கதையோடு பயணித்து தனக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக குறையில்லாமல் செய்திருக்கிறார்.

நிழல்கள் ரவி, தேனப்பன், ஓஏகே.சுந்தர்,சந்தோஷ் கீழட்டூர், சுனில்சுகடா, ஹரீஷ்குமார் ஆகியோர் படத்தில் தங்களுக்கு கொடுத்த  கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு, அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். மறைந்த சரத்பாபு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் கலைசெல்வன் சிவாஜி முழு படத்தையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேர காட்சிகளை மிக தெளிவாக படமாக்கியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கிரைம், த்ரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பயணித்திருக்கிறது.

வெறும் சைக்கோ திரில்லர், க்ரைம் என்பதோடு நிற்காமல் படத்தின் முடிவில் ஒரு நல்ல மெசேஜையும் வைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. முன் பாதியில் வேகமாக செல்லும் கதை, பின் பாதியில் சில இடங்களில் மெதுவாக சென்றாலும் நம்மை திகிலடைய செய்து சீட் நுனியில் அமர வைக்கிறார்ஒரு திரைப்படத்திற்கு எழுத்தாளரின் பங்கு இருந்தால்தான் அந்தப் படம் மேலும் மேன்மை அடையும் என்பதை உணர்ந்து எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷை தனக்குத் துணையாக்கி கொண்டு வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். வசனங்களிலும் திரைக்கதையிலும் எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷின் தனித்துவமான உழைப்பு தெரிகிறது. கொலையாளியை கண்டுபிடிப்பது தான் கதை என்றாலும், அதை படமாக்கிய விதம், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் ஆகியவை இயக்குனரை பாராட்ட வைக்கிறது. இப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் படம் “போர் தொழில்”