பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தண்டட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னை:
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.
கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது,
“இது உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விழா. இயக்குநர் ராம் சங்கையா கதை சொன்ன உடனே இந்த படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மையுடன் அவர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். இந்த கதைக்கு நாங்கள் முதலில் நினைத்த நடிகர் பசுபதியே இந்த படத்தில் எங்களுடன் இணைந்தார்.. அதேபோல் தான் ரோகிணியும் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேனியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக இதை நடத்தி முடித்துள்ளோம். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்களால் படப்பிடிப்பே கலகலப்பாக இருந்தது. அத்தனை பேரும் இயக்குனருக்கு டப் கொடுத்தார்கள். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இன்றைய சூழலில் மெதுவாக சில விஷயங்களில் இருந்து விலகி வருகிறோம். அப்படி ஒரு விஷயமான தண்டட்டி பற்றி இந்த படம் உருவாக்க வேண்டும் என நினைத்தோம் பாட்டிகளை அப்பத்தாக்களை கட்டிப்புடிக்கும் பேத்திகள் தருகின்ற அன்பு முத்தம் தான் இந்த படம்” என்றார்.
இசையமைப்பாளர் K.S.சுந்தரமூர்த்தி பேசும்போது,
“இயக்குநர் ராம் சங்கையாவுடன் 2019ல் இருந்து பயணித்து வருகிறேன். இந்த படத்தின் கதை சொல்லும்போது அந்த கிராமத்து மொழியில் அழகாக சொல்லுவார். தண்டட்டி பாடலுக்காக டியூன் எதுவும் போடவில்லை. பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய சந்தத்திற்கு இரண்டு விதமாக வெர்சனில் அந்த பாடலை உருவாக்கினோம். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. காக்கி பையன் பாடலுக்கு நிறைய பேரை பாட வைத்து அதில் அந்த கிராமத்து மண்ணுக்கு ஏற்ற பாடகர் மீனாட்சி ராஜா என்பவரை தேர்வு செய்து பாட வைத்தோம்” என்று கூறினார்.
நடிகை அம்மு அபிராமி பேசும்போது,
“இந்த கதையை இயக்குநர் சொன்னாலும் நான் தான் இந்த படத்தில் நடிப்பேன் வேறு யாரையும் தேர்வு செய்யக் கூடாது என சொல்லி விட்டேன். இந்த படத்தில் கிராமத்தில் இவ்வளவு அப்பத்தாக்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பசுபதி சாரின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி” என்று கூறினார்
நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது,
“தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தை பற்றி சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு இரண்டாவது படம். பசுபதியும் ரோகினியும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்த படத்தின் நடிக்க சம்மதித்து விட்டேன். இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு.. இதற்காக தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் நான் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன். ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரை கன்வின்ஸ் செய்து இந்த கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது,
“தண்டட்டி படத்தின் ஆரம்ப புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையை தூங்குவார்கள். ஆனால் எனக்கு விநாயகருக்கு பதிலாக வெங்கடாஜலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.. ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும்.
ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அதுபோல இந்த படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சை பிடித்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார்.
அம்மு அபிராமி இந்த படத்திற்கு ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் இரவு பகலாக நடித்து இரண்டே நாட்களில் அவரது வேலையை முடித்து விட்டார். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்கள் படப்பிடிப்பிலும் சரி டப்பிங்கிலும் சரி.. என்னை வச்சு செஞ்சுட்டாங்க.. நான் படப்பிடிப்பில் அவர்களை திட்டுவேன். ஒரு குழந்தை போல என்னிடம் கோபித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க வைப்பேன். எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் மகேஷ் முத்துசாமி போல ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் போதும். சுந்தரமூர்த்தி நகரத்து பின்னணியில் வளர்ந்தவர் என்றாலும் கிராமத்து இசையை எளிதாக உள்வாங்கி அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் கதை சொல்லி வீடு கேட்போம். அவர்கள் வீடு கொடுப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்கும் காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுதான் அனுமதி கொடுத்தார்கள். அப்படி ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது. அதற்கடுத்து படப்பிடிப்பிற்கு போனபோது கல்யாண வீட்டில் வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள் என வீடு கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுபோன்ற பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த படத்தின்போது நடந்துள்ளது” என்றார்.
நடிகர் பசுபதி பேசும்போது,
“சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்த கதை கேட்டேன். கேட்கும்போதே க்யூட் ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்கு பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். ரோகிணியும் நானும் அதிக காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படியான வசனம் எதுவும் இல்லை. விவேக் பிரசன்னாவை படப்பிடிப்பு சமயத்தில் என்னை போன்ற கலரில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் தீபா முக்கியமான வேலை பார்த்துள்ளார். படப்பிடிப்பில் என்ன ஒரு ஹைலைட் என்றால் நாம் டயலாக்கை மறந்து விட்டுவிட்டோம் என்றால் உடனே இந்த பாட்டிகளே யாரையும் எதிர்பார்க்காமல் கட் சொல்லிடுவாங்க. அவர்களுக்கு பயந்து கொண்டு வசனங்களை சரியாக பேசி நடிக்க வேண்டி இருந்தது. மகேஷ் முத்துசாமி தூங்குகிறாரா, சாப்பிடுகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. எந்நேரமும் வேலை என்று இருப்பவர். இதற்குமுன் அவருடன் பணிபுரிந்திருந்தாலும் இதுபோன்று அவரை நான் பார்த்தது இல்லை. பாடலாசிரியர் ஏகாதசியுடன் அந்த சமயத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டால் கூட இப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றி விட்டேன். நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்திற்கு இருக்கு” என்று கூறினார்.
இந்த நிகழ்விற்கு படத்தில் நடித்த அனைத்து தண்டட்டி அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்த படத்தின் டிரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக்கொண்டனர். குழுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.