சென்னை:
எந்த ஒரு மனிதனும் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் இருந்தால், அவனது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எப்படி சமாளிக்கிறான். இதனால் அவனது வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதை மையமாக வைத்து “குட் நைட்” படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விநாயகர் சந்திரசேகர்.
இப்படத்தின் கதாநாயகன் மணிகண்டன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை, அக்கா கணவன் ரமேஷ் திலக், விதவை தாய் இவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன், வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு ஐடி கம்பெனியில் பணி புரிகிறார் . அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணுடன் மணிகண்டனுக்கு காதல் ஏற்படுகிறது.
ஒரு நாள் அவரது காதலியுடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது குறட்டை விட்டு தூங்கி விடுகிறார். அந்த குறட்டையின் சத்தத்தை தாங்க முடியாமல் அவரது காதலி பிரச்னை செய்து, மணிகண்டனின் காதலை வெறுத்து ஒதுங்கி விடுகிறார். மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதனால், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடத்திலும் கேலியும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் இன்னொரு பெண் மீத்தா ரகுநாத் மீது மணிகண்டனுக்கு காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அழகான மனைவியான மீத்தா ரகுநாத் இவரது குறட்டை பிரச்சனையையும், இவரின் எல்லா விஷயத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார். ஒரு கட்டத்தில், கணவன் – மனைவி இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கணவனை பிரிந்த மீத்தா ரகுநாத் மறுபடியும் மணிகண்டனுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதுதான் “குட் நைட்” படத்தின் மீதி கதை!
கதாநாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் ஒவ்வொரு காட்சியிலும் மிக இயல்பாக நடித்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் பலம் சேர்த்திருக்கிறார். உடல் மொழியிலும் சரி, மற்றும் வசன உச்சரிப்பிலும் சரி தன் சிறந்த நடிப்பின் மூலம் பல இடங்களில் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் மணிகண்டன். தனது அலுவலகத்திலும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமும் குறட்டையால் அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார். சோக காட்சியிலும், அலுவலகத்தில் உயரதிகாரி திட்டும் போதும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வேதனைபடுவது, தன் குறட்டை பிரச்சினையால் பிரிவு ஏற்பட்டு ஆதங்கப்படுவது..என நடிப்பில் மிரட்டி இருக்கிகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மீத்தா ரகுநாத், தன் வாழ்க்கையில் பல வேதனைகளை சந்தித்த ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் அதிகம் பேசி நடிக்கவில்லை என்றாலும் அவரது கண்கள் மூலம் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.
மச்சானாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக், மணிகண்டனுடன் போட்டி போட்டு படம் முழுவதும் ஜாலியாக காமெடியில் கலக்கி இருக்கிறார்.
தாத்தாவாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பாட்டியாக நடித்திருக்கும் கவுசல்யா நடராஜன், ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்திருக்கும் ரேச்சல் ரெபாக்கா, மேலாளராக நடித்திருக்கும் பக்ஸ், தாயாக நடித்திருக்கும் உமா ராமச்சந்திரன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
குறட்டையை மையமாக வைத்துக்கொண்டு குடும்பமாக பார்த்து ரசிக்கும்படியான ஒரு சிறந்த கதையை தேர்வு செய்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். கதாநாயகன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரிடத்திலும் சிறப்பான வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனை கண்டிப்பாக பாராட்டலாம். ஒரு நாய் குட்டியை கூட சிறப்பாக நடிக்க வைத்து கைதட்டல் பெறுகிறார். நல்ல ஒரு பொழுதுபோக்கான இப்படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்து மகிழ்வார்கள் என்பதில் எந்த விதமும் சந்தேகமும் இன்றி இயக்கி இருக்கும் விநாயகர் சந்திரசேகருக்கு தொடர்ந்து படங்களை இயக்க கண்டிப்பாக வாய்ப்புக்கள் வரும்.
மூன்று வீடுகளையும் இணைத்து அனைத்து கதாப்பாத்திரங்களையும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் சேர்ந்து பயணித்திருக்கிறது. பின்னணி இசை இப்படத்திற்க்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த வாரம் வந்த படங்களின் பட்டியலில் ’குட் நைட்’ படத்தின் காமெடி சரவெடி.
திரைநீதி செல்வம்.