Take a fresh look at your lifestyle.

‘ ஃபர்ஹானா’ எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

76

CHENNAI:

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க,அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது..

எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது..

கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு படமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒவ்வொரு ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியாகும். அதுதான்  நான் எழுதிய படம் என்று நினைத்து பலபேர் போன் பண்ணுவார்கள். ஆனால், இந்த மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை புதிய நாளாக இருக்கும். இப்படம் வேறு மாதிரி இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷை அனைவரும் வேறு மாதிரி பார்ப்பார்கள்.

நான் நிறைய சிறு கதைகள் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக படைத்திருந்தார் நெல்சன். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரும்பாலான படங்களில் பெரிய வசனகர்த்தாக்கள் எழுதி கொடுத்த பெரும்பாலான வசனம் படத்தில் இடம் பெறாமலேயே போய்விடும். ஆனால், இப்படத்தில் 90 சதவீதம் நான் எழுதிய வசனம் இருந்தது பார்த்து மகிழ்ச்சி. படத்தை முழுவதும் பார்த்ததும், இப்படி ஓர் அற்புதமான படமா என்று உணர்ச்சி வசப்பட்டேன். இப்படத்தில் என்னுடைய எழுத்து வேறு இடத்திற்கு என்னை கொண்டு செல்லும். இப்போது இருக்கும் பெண்களுக்கு நிறைய சேலஞ்சஸ் இருக்கு. எந்த பெண்ணும் சந்திக்காத பிரச்னையை இப்பெண் சந்திக்கிறாள். இப்படத்திற்கு பிறகு பொது வெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடன் இப்படத்தை தொடர்பு படுத்திக் கொள்வாள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,

மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்க வில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற என்க்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே. சரி .. இப்போ ஃபர்ஹானா படத்திற்கு வருவோம்.

நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள்.. என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர்.

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மிக சிரமமான பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,

முதலில் என் அம்மாவிற்கு நன்றி. நான் டைரக்ட் செய்த முதல் படமான ஒரு நாள் கூத்தில் உயிருடன் இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு அவர் உயிருடன் இல்லை. கொரோனா வந்த பிறகு அனைவருக்குமே வாழ்க்கைமுறை அனைத்துமே மாறிவிட்டது. நிறைய கற்றுக் கொடுத்தது. இந்த காலகட்டத்தில் எனது குடும்பத்தில் 4 பேர் அடுத்தடுத்து என் அம்மாவையும் சேர்த்து மறைந்தார்கள். அந்த உணர்வால் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. ஆனால், எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னை தொடர்புகொண்டு பேசிக் கொண்டே இருப்பார். அதுதான் எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அவருக்கு நன்றி. அடுத்து பிரகாஷ் பாபு சாரிடம் இந்த கதையை கொடுத்தேன். அவர் நன்றாக இருக்கிறது என்று கூறினார். சில காலத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் என்னை அழைத்து எனக்கு வெப் சீரிஸ் வாய்ப்பு வருகிறது. ஆனால், ஒரு கதையும் சரியாக அமையவில்லை. நீங்கள் கூறிய கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதை வெப் சீரியசாக எடுக்கலாமா என்று கேட்டார். நான் மீண்டும் பிரகாஷ் சாரை அணுகினேன். அப்போது, பிரபு சார் என்னிடம் இக்கதையை 45 நிமிடம் கேட்டார். அவருக்கும் ப்டித்து போக.. அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

ஒரு படத்திற்கு எழுத்து மிகவும் முக்கியது என்று நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறுவேன். என்னுடைய ஆசிரியருடன் இணைந்து இக்கதையை விரிவாக எழுத முயற்சித்தோம். பேச பேச உயிருக்குள் உயிருள்ள கதையாகப் பேச ஆரம்பித்தது. ஃபர்ஹானா திரைப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3வது படம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் தான் வீடு. அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுபேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே முஸ்லீம் நண்பர்கள் நடுவில் தான். ஆகையால், நான் எடுக்கக் கூடிய படத்தின் பின்னணி, நான் வளர்ந்த.. அனுபவித்த கதையாக ஏன் இருக்க கூடாது? என்று நினைத்தேன். மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றி தான் எடுத்திருக்கிறேன். மதம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

நெல்சன் என்ற மனிதருக்காக ஆரம்பிக்கப்பட்ட படம்.
3 படங்கள் வரிசையாக எடுக்கலாம் என்று பேசிதான் இப்படத்தை ஆரம்பித்தோம். ஆனால், மூன்று வருடங்களாக ஒரே கதையை தான் எடுத்திருக்கிறோம். அவர் எல்லோரையும் கஷ்டப்படுத்தியாக கூறினார். ஆனால், அவர் அப்படி இருந்ததால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது. மான்ஸ்டர் படத்தில் வீடு தான் தளம் அமைத்து எடுத்தோம். ஆனால், எலி உண்மையாகத்தான் வைத்து எடுத்தோம். அதை யாரும் நம்பவில்லை.
ஃபர்ஹானா மூன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் மதம் சார்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள் பயப்படும் படமாக இல்லாமல் கொண்டாடும் விதமான படமாக இருக்கும் என்றார்.

நடிகை அனுமோள் பேசும்போது,

கேரளாவில், டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தில் நடிக்கப் போகிறேன் என்று கூறியதும் என்னுடைய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நெல்சன் சாருக்கு நன்றி. ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் எப்படி பழகுவார்கள் என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நித்யா. அதை அழகாக காட்டிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் திரில்லர், சண்டை என்று எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கிறது என்றார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது,

நீண்ட வருடங்கள் கழித்து திரையில் என்னைப் பார்க்கிறேன். இந்த தருணத்திற்காக பல வருடங்கள் காத்திருந்தேன். திரையில் நான் எப்படி இருக்கிறேன் என்று படம் பார்த்து விட்டு நீங்கள் அனைவரும் கூறுங்கள். நெல்சன் சாரிடம் இருந்து ஒருநாள் ஒரு செய்தி வந்தது. இப்படத்திற்காக கேட்டார். மான்ஸ்டர் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படத்தில் வரும் அந்தி மாலை.. பாடல் எனக்கு பிடித்த பாடல். இப்படத்தில் என்னை தேர்வு செய்ததும், டிரீம் வாரியர்ஸ் நிறுவனம், நெல்சன் வெங்கடேசன் சார் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் உடன் நடிக்கப் போகிறேன் என்றதும் இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்! என்னால் நடிக்கவெல்லாம்  முடியாது என்று இனி யார் கூறுவார்கள்? என்று என் அம்மாவிடம் உற்சாகத்துடன் கூறினேன். என்னை அழகாக காட்டிய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கோகுல் இருவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது,

2 வருடங்களாக தாடியுடன் சுற்றிக் கொண்டிருந்ததற்கு இப்போது படம் வெளியாவதில் மகிழ்ச்சி. நெல்சன் வெங்கடேசன் கதை கூறியதும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் என்னை நிமிர்ந்து நிற்கவே விடமாட்டார். இப்படத்திற்காக 7 கிலோ உடல் எடையைக் குறைத்தேன். என்னுடைய உடைகள் மிகவும் தளர்வாக இருக்கும். தனியாக என்னை யாராவது பார்த்தால் பிச்சைக்காரன் என்று முடிவெடுத்து விடுவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கேமராவிற்கு பின்பும் ஃபர்ஹானாவாகவே இருப்பார். அந்தளவிற்கு அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.நடன இயக்குநர் என்னை நன்றாக ஆட வைத்தார். எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி என்றார்.