Take a fresh look at your lifestyle.

’அகிலன்’ திரைப்பட விமர்சனம்!

163

சென்னை:

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் அகிலன். பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள அடுத்த படம் இது. இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில், துறைமுகத்தில் பணிபுரியும் அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதைப் பொருட்களை தனது அடியாட்களை வைத்துக் கொண்டு கப்பலில் கடத்தும் தொழிலை சட்டவிரோதமாக செய்பவர் ஹரிஷ் பெராடி. அவரிடம் அடியாளாக பணி புரிகிறார் ஜெயம் ரவி, இந்த சூழ்நிலையில் ஹரீஷ் பெராடிக்கு எதிராக   துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஜெயம் ரவி.இதனால்  ஜெயம் ரவிக்கும், ஹரிஷ் பெராடிக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் ஹரிஷ் பெராடி ஜெயம்ரவியை அந்த மாஃபியா கும்பல் தலைவனிடம் கொண்டு செல்கிறான்.

அப்போது உலக அளவில் தேடிவரும் தீவிரவாதியை கப்பலில் கடந்த வேண்டும் என்று அந்த தலைவன் கபூர் சொல்ல, இதில் நிறைய சிக்கல்கள் இருப்பதால் அங்குள்ள மற்றவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஜெயம் ரவி அந்த வேலையை தான்  செய்துமுடிப்பதாக கூறுகிறார். ஜெயம்ரவியை பிடிக்க சிறப்பு காவல்துறை அதிகாரி துடித்துக்கொண்டு இருக்கும் சூழலில், எப்படி அந்த தீவிரவாதியை கப்பலில் ஏற்றி நாடுகடத்தினார் ஜெயம் ரவி?  சிறப்பு காவல்துறை அதிகாரி ஜெயம்ரவியை கைது செய்தாரா? என்பதே ‘அகிலன்’ படத்தின் மீதிக்கதை..

இப்படத்தில் ஜெயம் ரவி மிக சிறப்பாக கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.அகிலன் என்ற  கரடுமுரடான கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாக நடித்து அசத்தியிருக்கிறார். கட்டுமஸ்தான உடம்பு, கோபம் கொண்ட கண்கள் என ஜெயம் ரவி தன்னால் முடிந்தவரை இப்படத்துக்காக உழைத்துள்ளார். யாரையும் மதிக்காமல் மிக இயல்பான  அகிலன் கதாபாத்திரத்தில் வலம் வரும்  ஜெயம் ரவி நடிப்பில் அவர் கையாண்ட விதத்தை பாராட்டலாம். கோபம், காதல், திட்டமிடல் போன்ற பல உணர்வுகளை எதார்த்தமாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். இன்னொரு கதாநாயகி தன்யாரவிச்சந்திரனுக்கு அதிகக்காட்சிகளும் இல்லை, அதிக வேலையும் இல்லை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிரக் ஜானி துடிப்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். ஹரிஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதனன், ஹரிஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் அளவான நடிப்பு மூலம் சிறப்பு செய்திருக்கிறார்கள்.

விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக துறைமுகம், கடல், கடல் சார்ந்த  காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தினாலும், போக போக ஒரே மாதிரியான இசையை கொஞ்சம் இரைச்சலாக கொடுத்து சலிப்படைய செய்துவிடுகிறார்.

இதுவரையிலும் நாம் தெரிந்து வைத்திருக்காத கடல் வழி போக்குவரத்து, துறைமுகத்தின் நடைமுறைகள்,  கன்டெய்னர் லாரிகள், அவை வரிசையாக துறைமுகத்துக்குள் வருவதும்,  பிரம்மாண்டமான சரக்கு கப்பல்கள், அவற்றில் கண்டெய்னர்களை ஏற்றும்விதம், அவற்றுக்கான நடைமுறை யுக்திகள் என்று பொது அறிவுக்கான அத்தனை விஷயங்களையும் இந்த ஒரே படத்திலேயே தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.முழுக்க முழுக்க  அதாவது துறைமுகத்தை மையமாக வைத்து  ஒரு சிறப்பான  கதையை தேர்வு செய்து எடுக்கப்பட்ட படம் இதுதான்.

மொத்தத்தில் அகிலன்’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.

திரைநீதி செல்வம்.