சென்னை:
பல தரப்பட்ட ஜானர்களில் அற்புதமான இசையைத் தரக்கூடிய திறமையான இசையமைப்பாளர் சி சத்யா. அவர் இப்போது சர்வதேச மகளிர் தினத்திற்காக ‘பெண்ணே பெண்ணே’ என்ற ஒரு அழகான சுயாதீனப் பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலை அவரது மகள்கள் சினேகா மற்றும் வைமு ஆகியோர் பாடியுள்ளனர்.
இது குறித்து இசையமைப்பாளர் சி சத்யா கூறும்போது, “இது மகளிர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல். பொதுவாக, பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை போற்றுவது பற்றி இந்த சமூகம் அடிக்கடி பேசுகிறது. ஆனால், அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே மட்டுப்படுத்தப்படுகிறது. உண்மையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் கூட துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். எனவே, பாடல் வரிகள் இது குறித்து வலியுறுத்தும் சாயல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதற்கு நேர்மாறாக, இசையில் ஒரு லைவ்லி பாப் ஆல்பம் உணர்வு இருக்கும். பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பாடலின் எண்ணம்” என்றார்.
சி சத்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் ஆழமான அர்த்தத்துடன் கூடிய வரிகளைக் கொண்டுள்ளது. மேலும், இது அன்றாட வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளைப் பற்றி பேசுகிறது. ஆனால் இதன் இனிமையான இசையின் பின்னணியில், கிதார் மற்றும் சி.சத்யாவின் மகள்கள் சினேகா & வைமுவின் அழகான குரல்கள் உள்ளது.
பாடலாசிரியர் தோழன் எழுதியுள்ள இந்த பாடலை பிரபாகர் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
இணை ஒளிப்பதிவாளர்கள்: ஜெகன் ராஜ் & மணிபாரதி, படத்தொகுப்பு: ஆதித்யா கிருஷ்ணமூர்த்தி,
DI: வீர ராகவன்,
ஒப்பனை: EVA,
VFX: யோகேஷ்