Take a fresh look at your lifestyle.

பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’

119

சென்னை:

பேஷன் ஸ்டுடியோஸ் இந்த வருடம் 2023-ல் பல படங்களுக்கான திட்டங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தற்போது அதன் புதிய புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் ’மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று  சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சில முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கதாநாயகி மற்றும் எதிர்கதாநாயகன் யார் என்பது குறித்து தயாரிப்புத் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இவர் நித்திலனின் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிலோமின் ராஜ் (மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், தளபதி 67) இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர். ’லவ் டுடே’ மற்றும் ‘விலங்கு’ இணையத்தொடர் மூலம் விஷூவல் மேஜிக் கொடுத்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘மதராசப்பட்டினம்’ மற்றும் பல படங்களில் அற்புதமான செட் வொர்க் செய்த செல்வகுமார் கலை இயக்குநராக இதில் பணியாற்றுகிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ‘சீதக்காதி’ மற்றும் ‘அனபெல் சேதுபதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தப் படம் மூலம் விஜய்சேதுபதியுடன் இணைகின்றனர்.