எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில், உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘திட்டம் இரண்டு’, ‘கனா’, ‘வடசென்னை’ போன்ற தமிழ் படங்களிலும், ‘சுழல்’ எனும் வலைதள தொடரிலும், ‘டாடி’ எனும் இந்தி படத்திலும் நடித்த சிறந்த நடிகைக்காக விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் தற்பொழுது சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான படைப்புகளுக்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை ஈர்க்கும் இந்த வகையான சினிமாவிற்கு இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.
‘மாணிக்: படத்தைப் பற்றி எண்டேமால் ஷைன் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி நேகி பேசுகையில், ” திறமையான இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், நட்சத்திர நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பிலும் ‘மாணிக்’ படத்தின் உயிரோட்டமான கதைக்களத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
‘மாணிக்’ படத்தை பற்றி நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வருண் திரிபுராநேனி பேசுகையில், ” எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இரண்டாவது படத்திற்காக, எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தி இந்த கதையை சொன்னபோது, நாங்கள் இதன் தயாரிப்பில் உற்சாகமாக களமிறங்கினோம். திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படக்குழுவில் இணைந்திருப்பதால், இந்தப் படம் தரமான படைப்பாக உருவாகும். இதனை நாங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
எண்டேமால் ஷைன் இந்தியா பற்றி…
எண்டேமால் ஷைன் இந்தியா, பனிஜாய் நிறுவனம், தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கான உள்ளடக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் இந்நிறுவனம் பனிஜாய் மற்றும் சி ஏ மீடியா எனும் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கூட்டணியுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் பார்வையாளர்களுக்காக 800 மணி நேர நிகழ்ச்சிகளை உருவாக்கி, இந்திய துணை கண்டத்தில் முதன்மையான உள்ளடக்க வழங்குநராக பணியாற்றி வருகிறது. பாலிவுட் திரையுலகில் திரைப்படங்களையும், பிராந்திய மொழிகளிலும் மற்றும் சின்ன திரையிலும் பாலிவுட் நட்சத்திர நடிகர்களுடன் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
2006ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இந்நிறுவனம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் மற்றும் வங்காளம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து, இந்த துறைக்கான சந்தையில் தொடர்ந்து முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது. ‘ஃபியர் ஃபேக்டர்’, ‘மாஸ்டர் செஃப் இந்தியா’, ‘சோ யூ திங்க் யூ கேன் டான்ஸ்’, ‘தி வாய்ஸ் இந்தியா’, ‘தி வாய்ஸ் இந்தியா கிட்ஸ்’, ‘ தி கிரேட் இந்தியன் லாஃபர் சேலஞ்ச்’, ‘லவ் ஸ்கூல்’, ‘லைஃப் மெய்ன் ஏக் பார்’, ‘தி மணி டிராப்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன், சன் தொலைக்காட்சியில் 450 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களுடன் ஒளிபரப்பான ‘டீலா நோ டீலா’ என்ற நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கி இருக்கிறது.
எண்டேமால் ஷைன் இந்தியா, ‘தி டெஸ்ட் கேஸ்’, ‘மாம்’ (மிஷன் ஆன் மார்ஸ்’ மற்றும் ஆர்யா போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான உள்ளடக்கத்தில் பெரும் பங்களிப்பை அளித்திருக்கிறது. மேலும் டச்சு மொழியில் வெளியான க்ரைம் தொடரான ‘பெனோசா’ என்ற தொலைக்காட்சி தொடரைத் தழுவி, புதிய தொலைக்காட்சித் தொடரையும் வழங்கி இருக்கிறது. மேலும் எங்களது நிறுவனம் பனிஜாய் மற்றும் சேகர் கபூருடன் இணைந்து ‘தி ஐபிஸ்’ எனும் மூன்று பாகங்கள் கொண்ட படைப்பினை உருவாக்குவதிலும், அதன் திரைக்கதையை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு செய்திருக்கிறது.
எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகருணி எழுதி, விரைவில் வெளியாக இருக்கும் ‘லயன்நெஸ் – தி லாஸ்ட் குயின்’ என்ற நாவலையும், எழுத்தாளர்கள் நீலம் மற்றும் சேகர் கிருஷ்ணமூர்த்தி இணைந்து எழுதிய ‘டிரையல் பை ஃபயர்’ என்ற புத்தகத்தையும், எழுத்தாளர் அர்ஜுன்ராஜ் கைய்ண்ட் எழுதிய ‘மகாராஜ் மிஸ்டரிஸ்’ என்ற நூலையும், எழுத்தாளர் தமயந்தி பிஸ்வாஸ் எழுதிய ‘யு பினீத் யுவர் ஸ்கின்’ என்ற புத்தகத்தையும் மற்றும் ரிச்சா முகர்ஜி எழுதிய ‘கான்பூர் கூஃபியா’ என்ற நாவலையும் படமாக உருவாக்குவதற்கான உரிமையை சட்டபூர்வமாக பெற்றிருக்கிறது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எண்டேமால் ஷைன் நிறுவனத்தை பனிஜாய் நிறுவனம் கையகப்படுத்தியது. இதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய உள்ளடக்க தயாரிப்பாளர் மற்றும் விநியோஸ்கஸ்தராக 120க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன், 22 பிரதேசங்களுக்கு எங்களின் சேவையை விரிவுப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் 88,000 மணி நேரத்திற்கான அசலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை பற்றி…
இந்நிறுவனம் ஹைதராபாத் மற்றும் சென்னையை மையமாகக் கொண்ட ஒரு புதிய தயாரிப்பு நிறுவனமாகும். வருண் திரிபுராநேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி. பிரித்விராஜ் ஆகியோரால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் நகை தொழிலில் முதலீடு செய்து வெற்றிக்கரமாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள், புதிய முயற்சியாக திரைப்பட தயாரிப்பு துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ‘தி டீச்சர்’ என்ற மலையாள மொழி திரைப்படத்தை தயாரித்து வருகிறது. நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து வரும் இந்த திரைப்படத்தை ‘அதிரன்’ பட புகழ் இயக்குநர் விவேக் வர்கீஸ் இயக்குகிறார். இந்த திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் இரண்டாம் தேதியன்று திரைரரங்குகளில் வெளியாகிறது.
இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘மாணிக்’ படத் தயாரிப்பில், எண்டேமால் ஷைன் இந்தியாவுடன் இணைந்திருக்கிறோம். இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான பணிகள் டிசம்பரில் துவங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.