சென்னை:
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா ஒளிப்பதிவில், விவேக்-ஜெஸ்வந்த் இரட்டையர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன், இளம் நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப்படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் மற்றும் அவரது சகோதரர்களான வரகுணன் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம் ஆகியோரின் தாயார் கமலாதேவி பஞ்சலிங்கம் வெளியிட, இயக்குனர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அதனை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் இரண்டு மரக்கன்றுகளையும் பரிசாக வழங்கி ஆரம்பமே அசத்தலாக இந்த நிகழ்ச்சி துவங்கியது.
இயக்குநர் அருண்குமார் பேசும்போது,
“இது எனக்கு முதல் படம்தான்.. கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்திக்க முடியாமல் வீடியோ கால் மூலமாகவே பேசி அவரிடம் சம்மதம் வாங்கினேன். அந்த அளவிற்கு என்னை நேரில் பார்க்காமலேயே என்மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு, ஸ்கிரிப்ட் வலுவாக இருந்தது. அதனால் அவரை கடவுள் அனுப்பி வைத்த ஏஞ்சல் என்றுதான் சொல்வேன். இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள மைக்கேல் தங்கதுரை ஒரு காட்சியில் குறுகலான ஒரு குகைக்குள் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தார். அதுமட்டுமல்ல காடுகளில் எடுத்த காட்சிகளில் கூட தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் நடித்ததை மறக்க முடியாது. ஃபேண்டசி த்ரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் சினேகன் எழுதியுள்ள நீதானே என்கிற பாடல் நான் திரும்பத்திரும்ப கேட்கும் ஒரு பாடல் ஆகும்” என்றார்.
நாயகன் மைக்கேல் தங்கதுரை பேசும்போது,
“நான் நடித்த ‘ஊமைச்செந்நாய்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜூ மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.. நான் சினிமாவில் நுழைந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது. கடின உழைப்பைத்தான் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். அதற்கான பலன் இந்த படத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் வரகுணன் பஞ்சலிங்கம் பேசும்போது,
“எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இரண்டு குறும்படங்களை எடுத்துள்ளோம். அடுத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தபோது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்திலேயே எடுக்கவேண்டும் என தீர்மானித்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.
மாஸ்டர் மகேந்திரன் பேசும்போது,
“இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். மைக்கேல் தங்கதுரை மற்றும் என்னை போன்றவர்களுக்கு தான் கஷ்டம். எனக்கான வலி மற்றும் போராட்டங்கள் தான் மைகேல் தங்கதுரைக்கும்.. நாளை நிச்சயமாக ஹிட் கொடுப்போம் என நம்புகிறேன்.. பொன்னியின் செல்வன் படத்தின் இசையை வெளியிட்டுள்ள அதே டிப்ஸ் மியூசிக் நிறுவனம் தான் இந்த படத்தின் இசையையும் வாங்கி உள்ளது என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது,
“இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார். என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும்போதும் சரி.. சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ பணத்துக்காகவோ பாட்டு எழுத வரவில்லை. பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல் தான் பாட்டு எழுதி தருகிறேன். ஈழத்தமிழர்களை உலகத்தமிழர்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டதுமே நான் பயந்துவிட்டேன். ஒருமுறை சதுரகிரி மலைக்கு சென்றபோது அங்கே இருக்கும் சித்தர்கள் மூலமாக நேரிலேயே நடந்த அதிசய நிகழ்வு ஒன்றை பார்த்து அதிசயித்தேன். அப்போதுதான் செடிகளுக்கும் பூக்களுக்கும் கூட எவ்வளவு வீரியம் இருக்கிறது என்பது புரிந்தது. இந்த கதையும் அதை எனக்கு உணர்த்தியது” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“இன்று வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல.. அது ஒரு சவால்.. எம்ஜிஆர், கமல் ஆகியோர் காலத்தில் முயற்சித்து முடியாமல் போனதை, இப்போது மணிரத்னம் சாதித்திருக்கிறார். திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்த சமயத்தில் இயக்குனர் சினேகன் எனது படத்தில் பாடல் எழுத வேண்டும் என விரும்பினேன். அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டு இப்படித்தான் பாடல் வேண்டுமென எழுதி வைத்திருந்ததை அவரிடம் காட்டினேன். அதை பார்த்துவிட்டு இந்தப்பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்துவிட்ட சினேக கவிஞன் அவர். விஜய்யும் அதற்கு உற்சாகம் கொடுத்தார். கடந்த 50 வருடங்களாக தமிழகம் வளர்ந்தது திராவிடர்களால் என்று இயக்குனர் சுப்பிரமணிய சிவா இங்கே பேசினார். ஆனால் அது உண்மை அல்ல.. தமிழர்களால் தான் தமிழகம் வளர்ந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழறிவால் தான் கதை எழுதினார்களே தவிர, திராவிட அறிவால் அல்ல. வெளிநாட்டிலிருந்து இங்கே படம் தயாரிக்க வருபவர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கிருப்பவர்களோ வெளியூருக்கு ஓடுகிறார்கள்,.
கதாநாயகி கவிப்ரியா பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான அழகுடன் அழகாக காட்சியளிக்கிறார். இப்போதெல்லாம் குடும்பப்பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.. இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும் குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் கவர்ச்சி பக்கம் செல்லவே கூடாது அப்படி தடம்மாறி செல்பவர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். உங்கள் பலமே அந்த குடும்பப் பாங்கு தான்.. அப்படி மாறினால் அவர்களது மார்க்கெட்டே காலியாகி விடும். நான் சினிமாவிற்கு முயற்சித்த காலகட்டத்தில் பல பேரிடம் நேரில் சென்று கதைசொல்லி பலவித கசப்பான அனுபவங்களை பெற்று உள்ளேன் ஆனால் தயாரிப்பாளரை சந்திக்காமல் வீடியோ காலிலேயே கதைசொல்லி வாய்ப்பு பெற்றிருக்கிறார் என்றால் இதுவே இயக்குனர் அருண்குமாருக்கு கிடைத்த முதல் வெற்றி” என்றார்.
தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் பேசும்போது,
“இயக்குநர் அருண்குமாருடன் முகநூல் மூலமாக தான் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது சுவையான விஷயங்களை அவர் பேசுவார். அதன்பிறகுதான் அவருடன் வீடியோ காலில் இந்த கதை குறித்து பேசினேன். அவர் சொன்ன அந்த கதைக்களம், குறிப்பாக ஃபேண்டசி திரில்லர் கதையாக அது இருந்ததால் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என்னைப் பொறுத்தவரை நான் கதைகளின் ரசிகன். ஏற்கனவே ஆங்கிலத்தில் இரண்டு குறும்படங்களை தயாரித்ததால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வந்தோம். இந்தப் படத்தை தயாரிக்க இங்கே ரிஸ்வான், வசந்தா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இந்த படத்தில் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் ஜெஸ்வந்த்தின் இசை உலகத்தரத்தில் இருக்கிறது என்று உறுதியாக சொல்வேன். அதனால்தான் பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பிரமாண்டமான படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய டிப்ஸ் மியூசிக் நிறுவனம் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளது” என்று கூறினார்
*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*
தயாரிப்பாளர் ; ஹரிஹரன் பஞ்சலிங்கம்
இயக்குநர் ; அருண்குமார்
ஒளிப்பதிவு ; சூர்யா
இசை ; விவேக் – ஜெஸ்வந்த்
படத்தொகுப்பு ; சசி தக்ஷா
பாடல்கள் ; சினேகன், அன்புச்செழியன்
கலை ; ஜெயசீலன்
ஆடை வடிவமைப்பு ; வெண்மதி
மக்கள் தொடர்பு ; A.ஜான்