சென்னை:
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள பாடல்களை அஜ்மல் இசையமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.