Take a fresh look at your lifestyle.

‘ட்ராமா’ திரைப்பட விமர்சனம்!

145

சென்னை:

ஒரு கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக தலைமை பொறுப்பை ஏற்கிறார் ஜெய்பாலா. அதே காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலருடன், மற்றும் ஆண் காவலர்களும் பணிபுரிகிறார்கள். அந்த காவல் நிலையத்தில் சார்லி  தலைமைக்காவலராக பணியில் இருக்கிறார்.  இந்த சமயத்தில்,  சப்-இன்ஸ்பெக்டரின் காதலியான  காவ்யா பாலுவின் பிறந்தநாளை அனைத்து காவலர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடுகிறார் ஜெய்பாலா.  இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக முன்னிரவில் திடீரென காவல் நிலையத்தில் மின்சாரம் தடைபடுகிறது. அதே நேரத்தில்  அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் சார்லி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என்பதை கண்டுபிடிக்க காவல் துறையின் உயரதிகாரியான  கிஷோர்  அந்த காவல் நிலையத்திற்கு வருகிறார். அந்தக் கொலையை செய்தது யார் என்பதை விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் ‘டிராமா’ படத்தின் கதை.

சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஜெய் பாலா, அவரது காதலியாக  நடிக்கும் காவ்யா பெல்லு,  வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, ஆகியோரின்  நடிப்பு ரசிக்க முடியவில்லை என்பதால்  புதுமுக நடிகர்கள் என்ற எண்ணத்தைதான் ஏற்படுத்துகிறது.  இவர்கள் நடிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல்நிலையத்தில் ஏற்படும் எதார்த்தமான சம்பவங்களாக எடுத்துக் காட்டினாலும் இந்த காட்சிகள் படத்திற்கு தேவையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

காவல்துறையின் விசாரணை உயர்அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காவல்துறை உயரதிகாரிகளுக்கு உதாரணமாக அவரை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு காவல் நிலையத்தில் முழு படத்தின் கதையும்  நடப்பது போன்ற காட்சிகளை  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அஜூ கிழுமலா, இப்படத்திற்காக  ஒரே இரவில், ஒரே ஷாட்டில் எடுப்பதற்கு கடினமாக உழைத்திருந்தாலும், அந்த உழைப்பு வீணாகி விட்டதில் வேதனைதான். ஷினோஸின் ஒளிப்பதிவுவும், பிஜிபால் இசையும் கதைக்கு ஏற்ப சிறப்பாக பயணித்துள்ளது.

இப்படத்தின் காட்சிகள் மெதுவாகவும் சோதிக்கின்ற  விதத்தில் இருந்தாலும் இறுதியில் சார்லி கொலை மற்றும் அதற்கான காரணத்தை வெளிப்படும்போது அதில் அடங்கியுள்ள கருத்து நம்மை வேதனைஅடைய வைக்கிறது.

மொத்தத்தில், ‘ட்ராமா’ படம் ரசிகர்களுக்கு தீனி போடுமா என்பது கேள்விகுறிதான்!