Take a fresh look at your lifestyle.

‘ஆதார்’ திரைப் பட விமர்சனம்!

154

சென்னை:

ஒரு கட்டிடம் கட்டும் இடத்தில் கட்டிட தொழிலாளியான கருணாஸும், அவரது மனைவி இந்த சூழ்நிலையில் ரித்விகாவும் இணைந்து அந்த கட்டிட பணி நடக்கும் இடத்திலேயே தங்கி சிமெண்ட், இரும்பு கம்பிகள் போன்றவற்றை பாதுகாக்கிறார்கள். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட, அவரை மருத்துவமனைக்கு கருணாஸ் அழைத்து செல்கிறார். அப்போது அவருக்கு துணையாக  குற்றம் பல செய்த  இனியா, அவர்களை தன் சகோதரர் ஆட்டோவில் அழைத்து செல்வதோடு, குழந்தை பெற்றெடுக்கும் ரித்விகாவுக்கு துணையாகவும் மருத்துவமனையில் இருக்கிறார்.  கருணாஸின் மனைவி மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு திடீரென்று மாயமாகிவிடுகிறார், அவருக்கு துணையாக இருந்த இனியா மர்மமான முறையில் மருத்துவமனையின் பின்புறத்தில் இறந்து கிடக்கிறார்.

காணாமல் போன தன் மனைவி ரித்விகாவை கண்டுபிடித்து கொடுக்குமாறு காவல்துறையில் கருணாஸ் புகார் அளிக்க, அந்த புகாரின் அடிப்படையில் ரித்விகாவை தேடும் காவல்துறை அவரை கண்டுபிடித்ததா? இல்லையா?,  இனியாவின் மரணத்தின் பின்னணி என்ன? என்பது தான் ‘ஆதார்’.படத்தின் மீதிக்கதை.

காமெடி நடிகனாக இருந்த கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருந்தாலும், படத்தில் ஒரு யதார்த்தமான கதாப்பாத்திரமாகவே வலம் வருகிறார். காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு காவல்நிலையத்தில், கைகுழந்தையுடன் முறையிடும் காட்சிகளில் நடிப்பால், நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார் கருணாஸ். இப்படி பல படங்களில் பாவப்பட்ட மனிதராக நடித்திருப்பதால் காவல்துறை அதிகாரியிடம் அடி வாங்கும் போது அனைவரையும் அனுதாபப்பட வைக்கிறார்.  இனி கருணாஸ் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.  அவரது நடிப்புக்கு கைத் தட்டல் கொடுக்கலாம்.

கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் ரித்விகா, அவ்வப்போது தலை காட்டினாலும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். கதையில் முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்விகாவை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது. குற்ற பின்னணி கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இனியாவின் அறிமுகம் அதிரடியாக சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வயதான காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண்பாண்டியன், மிக பொறுமையான மனிதர் என்று தன்னை காட்டிக்கொள்வதற்காக அவர் சோகமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர், இனியாவின் சகோதரராக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் உமா ரியாஸ்கான் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்கிறது.ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, கதாப்பாத்திரங்களை இயல்பாக காட்டியிருப்பதோடு, கதைக்களத்தோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.

படம் பார்க்கும் போது ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாதவாறு, எதிர்பார்ப்புடன் இருக்கையின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார். கார்பரேட் கம்பேனிகள் செய்யும் தில்லு முல்லுகளை  பணமும் அரசியல்வாதிகளின் துணை இருந்தால் நீதியைக்கூட விலைக்கு வாங்கிவிடலாம் என்ற இன்றைய காலகட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது இந்த ‘ஆதார்’  படத்தின் கதை.

மொத்தத்தில், ‘ஆதார்’ திரைப்படம் ஏழைகளுக்கு ஒரு பாடம்.