சென்னை:
ரிக் கிரியேஷன் நிறுவனம் சார்பாக ஹேமாவதி ரவிஷங்கர் தயாரிக்கும் முதல் படம் ‘ஓட்டம்’. பல திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திகில் படமான இதில் கதாநாயகனாக நடித்து இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.பிரதீப் வர்மா. கதாநாயகிகளாக கர்நாடகவைச் சேர்ந்த ஐஸ்வர்யா சிந்தோஹியும், கேரளாவைச் சேர்ந்த அனுஸ்ரேயா ராஜனும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சாய்தீனா, அம்பானி சங்கர், நந்தகோபால், ரஜினி, நிக்ஸிதா உள்ளிட்ட பலர் நடிக்க, வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரத்தின் மூலம்k நடிகராக ரவிஷங்கர் அறிமுகமாகி, வில்லத்தனமும், நகைச்சுவையும் கலந்த அதிரடி நடிப்பில் கலக்கியிருக்கிறார்.
இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ராம்தேவ் வடிவமைக்க, ஜோசப் ராய் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குநராக எம்.முருகன் அறிமுகமாகிறார். இவர் மறைந்த இயக்குநர் இராம நாராயணனிடம் ‘ராஜகாளி அம்மன்’, ‘பாளையத்து அம்மன்’, ‘அன்னை காளிகாம்பாள்’, ‘மண்ணின் மைந்தன்’ போன்ற படங்களில் முதன்மை உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.