Take a fresh look at your lifestyle.

Jama Movie Review

24

பாரி இளவழகன் இயக்கத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 2 ல் வெளியாகும் படம் ஜமா
இசை: இளையராஜா

கதை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து ஜமாவில் பெண் வேடமிட்டு நடிக்கும் நாயகன் பாரி இளவழகன் அந்த ஜமாவில் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான வேடங்களை போட்டு நடிக்கவேண்டும் என்பதோடு எதிர்காலத்தில் தான் இருக்கும் தெருக்கூத்து ஜமாவில் வாத்தியாராக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அந்த ஜமாவின் வாத்தியாரான சேத்தன், அவரது வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அனைத்தையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து ஜமாவில் பயணிக்கும் பாரி, தான் நேசிக்கும் கலைக்காக வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்து, பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கான வாய்ப்பு கிடைத்ததா?, அவர் ஏன் அந்த ஜமாவின் வாத்தியாராக வேண்டும் என்று விரும்புகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதை எழுதி இயக்கியிருப்பதோடு, கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன்,
கல்யாணம் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறார். தெருக்கூத்தில் பெண் வேடம் போட்டு ஆடும் போது அவர் வெளிப்படுத்தும் உடல்மொழிகள், அவர் இயல்பாக இருக்கும் போதும் அவ்வபோது எட்டிப்பார்ப்பது, கோபம் வந்தாலும் சரி,  சோகமாக இருந்தாலும் சரி, உடல்மொழியில் எந்தவித மாற்றமும் இன்றி சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக செய்திருக்கும் பாரி இளவழகன் சிறந்த இயக்குநர் மட்டும் இன்றி சிறந்த நடிகருக்கான விருதுக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தாண்டவம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார். கோபக்கார அப்பாவையே எதிர்த்து நிற்கும் தைரியமான பெண்ணாக கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.பாரியின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், பாரியின் அம்மாவாக நடித்திருக்கும் மணிமேகலை, பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். மற்ற இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. குறிப்பாக தெருக்கூத்தில் இடம்பெறும் பாடல்களை தேவையான அளவு பயன்படுத்தியிருப்பதோடு, இறுதிக் காட்சியில் அந்த பாடலையே பின்னணி இசையாக பயன்படுத்தியிருப்பது, தெருக்கூத்து கலை மீது ரசிகர்களுக்கு பேரார்வத்தை தூண்டுகிறது.
ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் கேமரா கிராமத்து எளிமையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் அதில் நடிப்பவர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது. படத்தொகுப்பாளர் பார்த்தா எம்.ஏ, கலை படைப்பை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களைப் பற்றிய படமாக இருந்தாலும், அவர்களின் சோக கதையை சொல்லாமல், அவர்களின் இயல்பான வாழ்க்கை, அந்த கலை மீதான அவர்களின் பற்று மற்றும் அதில் முதன்மையானவராக இருக்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சினிமாத்தனமாக சொன்னாலும், அதை அளவாக சொல்லி இரண்டு மணி நேரம் நம் கவனம் எதிலும் செல்லாத வகையில் படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். பாராட்டுக்கள்.