அபூர்வ சகோதரர்கள் படத்துடன் புதிய பாதை படத்தை போட்டிக்கு விட்டதை போல 28 வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்துடன் பார்த்திபன் மோதியுள்ளார். இந்தியன் 2 படம் பெரிய படம் என்றும் அந்த படத்தை பார்த்து விட்டு என்னுடைய படத்தை வந்து பாருங்க என்று பார்த்திபன் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முழுக்க முழுக்க சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பயாஸ்கோப் நிறுவனமும், அக்கிரா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பார்த்திபன் இந்த படத்தை இயக்க டி. இமான் இசையமைத்துள்ளார்
கதை
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 சிறுவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களை சிறுவர்கள் என்று பெற்றோர்கள், உறவினர்கள் அழைப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை. வெளிநாடுகளைப் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் அதிகமான சுதந்திரம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். தாங்கள் சிறுவர்கள் இல்லை, டீன்யேஜ் வயதில் இருப்பவர்கள் என்று நிரூபிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில் ஒரு சிறுமி தன் ஊரில் பேய் இருப்பதாகவும், அமானுஷ்ய நிகழ்வுகளும் நடப்பதாக கூற, இந்த 12 சிறுவர்கள் பள்ளியை கட் அடித்துவிட்டு செல்கின்றார்கள். அப்படி செல்லும்போது வழியில் ஒரு பையனையும் தங்களுடன் இழுத்துக்கொண்டு 13 பேராக போகிறார்கள். அப்போது அவர்கள் செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் காட்டு வழியில் பயணிக்கிறார்கள். மேலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து விடுகிறார்கள்.
இதனால் சிறுவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. அடுத்தடுத்து சிறுவர்கள் தொலைந்து கொண்டே போவதால் மற்றவர்கள் தேடுகிறார்கள். கடைசியில் என்ன ஆனது? பேய் இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
சிறுவர்களாக நடித்த அனைவரும் அவரவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார்.
இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. கவுமிக் ஆரியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
பார்த்திபனின் கதை தேர்வு மற்றும் புதிய கோணத்தில் ஒரு விஷயத்தை அணுகுவது, இந்த படம் கமர்ஷியில் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ புதுசா முயற்சிப்போம். அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம் என நினைத்து படம் எடுத்ததற்கு பாராட்டுக்கள்
ஒரு முறை பார்த்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு படத்தில் ஒரு சூப்பரான மேட்டர் உள்ளது. பாருங்கள்.