Take a fresh look at your lifestyle.

Erapathamkatrumazhai

57

*பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் வழங்கும், அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கத்தில், ‘ஜீவி’ வெற்றி- கிஷன் தாஸ் நடித்துள்ள படம் ‘ஈரப்பதம் காற்று மழை’!*

வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன். ‘ஜீவி’ படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’ என்ற புதிய படம் இப்போது தயாராகி உள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது, ”’ஈரப்பதம் காற்று மழை’ திரைப்படம், மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம். வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது. இப்படம், மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில் இந்தக் கதை கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு வரும் நிகழ்வுகள் படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும் அதேசமயம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்ற வாழ்வின் நிலையற்ற தன்மையை இந்த படம் உணர்த்தும்.

முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை, அது தனி நபரின் உணர்வைப் பற்றியது என்ற எண்ணத்தையும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதன் விளைவுகளை பெறுத்ததே வாழ்க்கை என்பதை இந்தப் படம் நமக்குத் தருகிறது.
படத்தின் ஒவ்வொரு விவரமும் தனி கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கதை நடைபெறுவதால், முடிந்த அளவுக்கு லைவ் லொகேஷனில் அதன் உண்மைத்தன்மையுடன் படம் பிடித்து இருக்கிறோம்.

இந்தப் படத்தில் நடிகர்கள் வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி ஆகிய மூவரும் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களையும் அவற்றின் ஆழமான உணர்ச்சிகளை புரிந்து கொண்டு திறமையாக நடித்துள்ளனர்.

தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதையின் தரமும் படைப்பின் உண்மை உணர்வும் மாறாது வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வரக்கூடிய பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் நாங்கள் இணைந்தது பெருமைக்குரிய ஒன்று.

வர்த்தக வட்டார நாயகனாக வலம் வரக்கூடிய நடிகர் வெற்றி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். திரையுலகில் நுழைவதற்கு முன்பே பிரபலமான நடிகர் கிஷன் தாஸ் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர்களுடன் திறமையான தியேட்டர் ஆர்டிஸ்ட்டான தீப்தியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் உள்ள நடிகர்களின் திறமையான நடிப்பால், நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு இந்தப் படம் ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

அறிமுக இயக்குநர் சலீம் ‘மயக்கம் அது மாயம்’ போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார். இது வலுவான கதைகளம் மற்றும் அற்புதமான மேக்கிங் ஸ்டைலுக்கு வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரத்யேக கதைகளை திரைப்படங்களாக உருவாக்குவதை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் இயக்குநர் சலீமின் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

’ஈரப்பதம் காற்று மழை’ படத்தை சலீம் ஆர் பாட்ஷா எழுதி இயக்கியுள்ளார். மேலும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஸ்ரீராம் வெங்கடேஷ் இசையமைத்திருக்க, அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகவும், அந்தோணி மரியா கெர்லி எல் கலை இயக்குநராகவும், நூர் முகமது ஸ்டண்ட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.