Take a fresh look at your lifestyle.

’சினம்’ திரைப்பட விமர்சனம்!

153

சென்னை:

ஒரு உண்மையான நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான அருண் விஜய், கதாநாயகி பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அனாதை இல்லத்தில் வளர்ந்த அருண் விஜய் தனது மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக  வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்ற பாலக் லால்வாணி வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அருண் விஜய் அவரை தேடி அலையும்போது, பாலக் லால்வாணி கொலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைக்கிறது. இதனால் பதற்றம் அடைந்த அவர் தன் மனைவி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு செல்கிறார். அங்கு தன் மனைவி உடல் பக்கத்தில் மற்றொரு ஆணும் கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார்.  மாயமான மனைவி எப்படி கொலை செய்யப்படார்? அவரது கொலைக்கான பின்னணி என்ன? கொலை செய்யப்பட்ட ஆண் யார்? என்பதை போலீஸ் அதிகாரியாகவும், கோபம் கொண்ட கணவராகவும் அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான்  ‘சினம்’ படத்தின் மீதிக்கதை!

காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்திற்குரிய வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அருண் விஜய், கம்பீரமான நடிப்போடு, உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் எல்லோரையும் கவர்கிறார். ஆக்ரோஷமான போலீஸாக அதிரடி காட்டுவதோடு மட்டும் இன்றி, மனைவியை இழந்து தடுமாறும் கணவராகவும், தாயை இழந்து தவிக்கும் குழந்தையை சமாதனாப்படுத்த முடியாத தந்தையாகவும் நடிப்பில் கலங்க வைக்கிறார்.

கதாநாயகி பாலக் லால்வாணி. அமைதியான அழகு. அன்பான மனைவியாக. நடித்திருக்கும் அவருக்கு அப்படி ஒரு துயரம் ஏன் என்பதை நம் மனம் ஏற்க மறுத்து வேதனையை அளிக்கிறது.

மனைவியை இழந்த அருண் விஜய்யிடம் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுக்கும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் சித்து சங்கரின் கதாபாத்திரமும் நடிப்பும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. அவர் மனதை நோகடிக்கும் காட்சியில், படம் பார்ப்பவர்களே அவர் மீது கடும்கோபம் கொள்ளும் அளவுக்கு  நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கோபிநாத் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் இதமாகவும் கடைசிக்காட்சிகள் பயமுறுத்தவும் செய்கின்றன.ஷபீர் இசையமைத்துள்ளார். பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசை மிதமாக இருக்கிறது.

ஆர்.சரவணனின் கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன் நேர்த்தியான படைப்பைக் கொடுத்திருக்கிறார். எந்தவித துப்பும் கிடைக்காமல் அருண் விஜய் திணறுகின்ற  காட்சிகளில், யாருக்கும் யோசிக்க  முடியாதபடி சிறப்பாக காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் குமரவேலன், படத்தின் இறுதிக்காட்சி வரை அந்த விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தி செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில், ‘சினம்’ அனைவரும் பார்க்க கூடிய மற்றும்  நம் சமுதாயத்திற்கு தேவையான ஒரு திரைப்படம் என்று பாராட்டலாம்.