நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா 26.10.2024  சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’புஷ்பா2’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் சிவா சார் என்னை சந்தித்து இந்தக் கதை சொன்னார். இவ்வளவு பிரம்மாணட கதையை சாத்தியமாக்கியது பெரிய விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா சாருடன் நெருங்கிப் பழகும் இந்த வாய்ப்பு இதில் கிடைத்தது. மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். பாபி தியோலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் நான் 3 பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடல்களைவிட, விவேகா எழுதிய மன்னிப்பு என்கிற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ’பாகுபலி’ படத்திற்கு வசனம் எழுதிய போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, ரொம்ப நாட்களுக்கு பின் இந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த போது எனக்கு மனதிற்குள் என்ன அதிர்வு இருந்ததோ அந்த அதிர்வு என் மனதிற்குள் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சிவாவிற்கு நன்றி. அவரின் கனவு அடுத்தடுத்த படத்தில் வெளிவரப்போகிறது. ’கங்குவா’ பத்து பாகமாக வரக்கூடிய அளவிற்கு அதில் கதை உள்ளது” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், “நான் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யாவிடம் ’கங்குவா’ படத்தைப் பற்றி அடிக்கடி கேட்பேன். எப்போது படத்தைப் பற்றி பேசினாலும் சூர்யா உற்சாகமடைந்து விடுவார். ’கங்குவா’ படம் முடிந்த பின் கூட அவர் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ’கங்குவா’ படத்தின் ஐந்து நிமிட காட்சியை  சூர்யா என்னிடம் காட்டினார். இந்த படம் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கும். இந்திய சினிமாவில் இந்த மாதிரி ஒரு படத்திற்காக நாம் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். சூர்யா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் ஸ்டைலில் நாம் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவோம். ஆனால், அதை எழுதும்போதே அப்படி எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று தோன்றும் ஆனால் கங்குவா படத்தை உலக தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ’கங்குவா’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் கருணாஸ், “சினிமாவிற்கு வந்த இத்தனை வருடங்களில் நான் எந்த இயக்குநருடனும் வேலை செய்யவில்லையே என்று வருத்தப்பட்டது இல்லை. ஆனால், ’கங்குவா’ படப்பிடிப்பு முடிந்ததும், இவருடன் இணையவில்லையே என்று வருத்தப்பட்டேன். டையலாக் பேப்பர் கூட இல்லாமல் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார் என்றால் அது சிவா தான் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நான் லொடுக்கு பாண்டியாக நடித்த முதல் படத்தின் ஹீரோ சூர்யா. இவருடன் எப்படியாவது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தில் நடித்துவிடுவேன். நந்தா, பிதாமகன், அயன், சூரரைப்போற்று தற்போது கங்குவா. நான் அவருடன் நடித்த அனைத்துப்படமும் வெற்றிப்படம் தான். வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் உயர்த்தவர் தான் சூர்யா. நான் பலருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், தன்னுடைய வேலையை நேசித்து செய்யக்கூடியவர் சூர்யா. ’நந்தா’ படத்தில் நான் சூர்யாவை எப்படி பார்த்தேனோ, அதே சூர்யாவை இந்த படத்திலும், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தான் செய்யும் தொழில் மீது அக்கறையுடன் இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
நடிகர் போஸ் வெங்கட், “ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போவே சொல்லி கொடுக்கணும். அனைவருக்கும் படிப்பை கொடுத்துவிட வேண்டும். அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும். பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்” என்றார்.
நடிகர் யோகிபாபு, “சிவா சாருடன் ‘வீரம்’ படத்தில் அஜித் சாருடன் பணிபுரிந்தேன். அதன்பிறகு ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்தேன். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா சாருடன் ஒரு காட்சி நடித்தேன். பின்பு அவர் சொல்லி ‘கங்குவா’ படத்தில் முழுவதும் நடித்திருக்கிறேன். சூர்யா சார் கடுமையான உழைப்பாளி. என் உடன்பிறந்த சகோதரர்தான். நீங்கள் அடுத்து உலக சினிமாவுக்கும் செல்ல வேண்டும்” என்றார்.
நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் ’காக்க காக்க’. அந்த படம் தான் சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம். அந்த படத்தை தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’ இந்த படங்கள் நான் காலேஜில் படிக்கும் போது பார்த்த படம். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் பல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா தான். அவர் என் கதையை கேட்டு என்மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது. அனைவரும் இணையத்தில் What are you cooking bro என்று கேட்குறீர்கள். பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் தரப்படும் அதற்கு நான் கேரண்டி. சூர்யா சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ் வெங்கட் சார் சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டுமில்லை. ஒரு தெருவில் மரம் விழுந்து, அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் அவர் தான் அரசியல்வாதி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சின்ன சின்னதாக நல்லது செய்தால் அவரும் அரசியல்வாதிதான். அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். மாற்றம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலே அவருக்கு போதுமானது” என்றார்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், “சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த மாதிரியான படத்தில் பணியாற்ற அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு இதில் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவுதான் படத்தில் டெக்னீஷியன்கள் வேலை செய்தாலும் ஒரு கதாநாயகன் தான் அந்தப் படத்தின் முகம். சூர்யா அனைவரையும் சமமாக மதிப்பவர்” என்றார்.
நடிகர் கார்த்தி, “எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னாங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், மாலையில் 3 மணி நேரம் டான்ஸ் கிளாஸ் போனார். ’ஆயுத எழுத்து’ படத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டை செய்தார். இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எல்லா பசங்களும் ஹெல்த்தை சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமாக இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை. படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். ’கங்குவா’ படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. சிவா சார் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும்” என பேசினார்.
வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் அவர் பேசியதாவது, “நான் முன்னதாக இயக்குநர் சிவாவிடம் தனக்காக ஒரு பீரியட் படம் செய்யும்படி கேட்டபோது அவரும் சரி என்று சொன்னார். அப்படி பார்த்தால், ’கங்குவா’ படம் எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம். இந்தப் படத்தை அடுத்து சிவா எனக்காகவும் இதுபோன்ற ஒரு கதையை உருவாக்குவார். வித்தியாசமான கதைகளை தயாரிப்பதில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகுந்த விருப்பம் உடையவர். இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கேட்டபோது, ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர் சிவாவுடன் ’அண்ணாத்த’ என்ற ஒரு படத்தில்தான் பணியாற்றினேன். ஆனால், 20, 30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் அவருடன் ஏற்பட்டிருக்கிறது. சூர்யாவின் கண்ணியம், ஒழுக்கம் நேர்மை அனைவருக்கும் தெரிந்ததே! அவரை போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பப்படியே ’கங்குவா’ படம் அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார்.
விழாவில் பேசிய இயக்குநர் சிவா, “’கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.
இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்” என்றார் .
கதையின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது, “அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. ரசிகர்களுடைய  27 வருட அன்பிற்கும் வாய்ப்பு கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார். எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.
சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.
இந்த படம் பெரிய தலைவாழை விருந்து. மேலும் மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம். நல்லதே நடக்கும், என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன். மன்னிப்பு ஒரு அழகான விஷயம் என்பதை எனக்கு சிவா கற்றுக்கொடுத்தார். அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம்.
சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மாதிரி பார்க்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் ‘பாஸ்’ என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை எப்பவுமே எளிதாக அணுகலாம். என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார். விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்” என்றார்.
#ganguvaaudiolaunch
Comments (0)
Add Comment