அறிமுக இயக்குனர் ஆனந்த ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தில் மதன் கௌரி, பவனி ஸ்ப்ரே, பின்னி ஆலிவர்,வெங்கட் பிரபு, கஃய் பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், பாலா, இர்ஃபான் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஹெச்.காசிப் இசையமைத்திருக்கிறார்.
கதை
சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சென்னை வரும் ஆனந்த், தனது சக பயணியான டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதாக கதை தொடங்குகிறது.
படித்து விட்டு வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார் ஆனந்த். இருந்தாலும் பல்வேறு வேலைக்கு சென்று முயற்சிக்கிறார். எந்த வேலையும் சரியாக அமையவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து NOVP Event ஆரம்பிக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சி கைகூடாததால் உடன் இருந்த நண்பர்கள் எல்லாம் வேலைக்கு சென்று சம்பாதித்து நன்றாக வாழ்கின்றனர். ஆனந்துக்கு வேலை கிடைக்காததால் பணம் இல்லாமல் நண்பர்கள் சிலரால் அவமானப்படுத்த படுகிறார். கண்ணம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். தன் அப்பாவின் அறிவுரைப்படி வீட்டை அடமானம் வைத்து பணம் செலவழித்து சிங்கப்பூர் செல்கிறார். அங்கே வேலை செய்து, வீட்டிற்கு பணம் அனுப்பி அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்கிறார். ஊரில் இருக்கும் நண்பர்களின் நினைவு அடிக்கடி வந்து போகிறது.
சென்னையிலிருக்கும் காதலி கண்ணம்மாவிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது என்ற தகவல் வருகிறது. சென்னை புறப்பட்டு வருகிறார் ஆனந்த்.
இங்கே வந்து நண்பர்களை சந்தித்தாரா? காதல் என்ன ஆனது? NOVP Event முயற்சி என்ன ஆனது ? என்பதே படத்தின் மீதிக்கதை
நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு படித்த இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களை தனது உணர்வுகளின் மூலம் நன்றாக நடித்து வெளிப்படுத்தியுள்ளார் ஆனந்த். காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகி விட்டது என்று தெரிந்தவுடன் அடையும் வேதனைகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார். ஒரு சராசரி தமிழ் பெண்ணின் பிரதிபலிப்பாக நன்றாக நடித்து இருக்கிறார் பவானி ஸ்ரீ.
அப்பா கேரக்டரில் இளங்கோ குமரவேல். என்ன கஷ்டம் வந்தாலும் தன் மகன்களுக்கு தெரிய கூடாது, நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என நினைக்கும் பல்வேறு அப்பாக்களை நடிப்பில் கண் முன் கொண்டு வருகிறார். நல்ல நடிப்பு.
ஒவ்வொரு பருவத்திலும் 6 பேர் கொண்ட குழு, நண்பர்கள் கேங்காக வலம் வருகிறார்கள். அதில் ஆர்.ஜே விஜய், வினோத், குகன் பிரகாஷ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். தாயாக விசாலினியின் நடிப்பு அருமை.பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா வின் நடிப்பு அசத்தல். ஏ.எச்.காஷிப் இசையில் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஹிப்ஹாப் தமிழா என ஒரு நட்சத்திர பட்டாளமே தலா ஒரு பாடல் பாடியுள்ளது ரசிக்கும்படி உள்ளது. இதில் தனுஷ் பாடிய ‘ஆலாதே’ பாடல் அருமை. பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வருகிற இடங்கள் கைதட்டல்கள். . ஏலகிரி மலை, சிங்கப்பூர் நகரத்தின் பிரமாண்டம் என ஒளிப்பதிவாளர் தமிழ்ச்செல்வன் தனது ஒளியுணர்வால் ரசிக்க வைக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நண்பர்கள் வைத்து கதை வருவது குறைவு தான். அப்படியே வந்தாலும் சில படங்கள் வெற்றி அடைந்தாலும், சில படங்கள் தோல்வியில் முடிகிறது. அந்த வகையில் தற்போது நண்பர்கள் கதைக்களத்தை வைத்து இயக்குனர் ஆனந்த் இயக்கி, நடித்தும் இருக்கிறார். ஒரு சிறு பையனுடைய வாழ்க்கையில் நண்பர்கள் மூலம் நடக்கும் நிகழ்வை அடிப்படையாக வைத்து எல்லோரும் ரசிக்கும்படி சுவையாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.