பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நேற்றைய முன் தினம் சென்னையில் நடந்த பேரணியில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நேற்றைய முன் தினம் சென்னையில் நடந்த பேரணியில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் நீதி விசாரணையை நேர்மையான முறையில் நடத்தி உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடுக. வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லாத பட்சத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை, பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்திடுக. 
2.இக்கொலை வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியிருப்பதைச் சமீபத்திய விசாரணையின் மூலம் அறியமுடிகிறது. இவ்வழக்கில் ஆருத்ரா நிறுவன மோசடி பின்னணியையும், பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் படுகொலையில் ஈடுபட்டு இருப்பதையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொணர்ந்திடுக.
3.சமூகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவரும், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருமான ஆர்ம்ஸ்ட்ராங் போன்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், தமிழகத்தின் தலித் தலைவர்கள், செயற்பாட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடுக.
4.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்டராங்  அவர்களின் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் சமீபத்தில் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். கொலை பாதக செயல்களில் ஈடுபட்டவர்களை இயக்கியது யார் என்கிற சங்கிலித் தொடரைக் கண்டுபிடித்து, பாரபட்சமில்லாமல் அனைவரும் நீதி விசாரணையின் முன் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறை என்கவுண்ட்டரை அரசு ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்.
5.அரசியல் படுகொலைக்கு உள்ளான தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில ஆண்டுகளுக்கு முன்னே தன்னை குறித்து அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுத்து நியாயத் தீர்ப்பை பெற்றுள்ளார், நீதிமன்றமும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதத் தொகை விதித்து கண்டித்தது. இப்படியிருக்க, அவரது மறைவிற்குப் பிறகு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவரை இழிவுபடுத்தும் விதமாக அவதூறுகளைப் பரப்பும் ஊடகவியலாளர்கள், அரசியல் இயக்கத்தார்கள், தனி நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திடுக.
6.தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் தொடர் வன்முறையை விசாரிப்பதற்கு அரசு சாரா தலித் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள் கொண்ட குழு அமைத்திடவும் அக்குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும்.
7.தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகளை ஆய்வு செய்வதற்குப் பாராளமன்ற குழு ஒன்றை உடனடியாக ஒன்றிய அரசு அமைத்திட வேண்டும்.
8.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னால் வன்கொடுமைகளைக் களைந்திட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகளுக்கான ஆணையம் உருவாக்கி அதற்கென்று சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இருந்தும் வன்கொடுமை வழக்குகள் மீதான  விசாரணைகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நிகழாமல் இருக்கிறது. இதனை சரி செய்து அவ்வாணையத்தின் செயல்பாடுகள் உறுதியாகவும் விரைவாகவும் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#bspamstrong
Comments (0)
Add Comment