‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு

‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு
ஆண்ட பரம்பரை என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று பிச்சை எடுக்கிறார்கள் – ‘செம்பியன் மாதேவி’ பட விழாவில் தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு
தற்போதைய இந்திய சூழலில் ‘செம்பியன் மாதேவி’ முக்கியமான படம் – இயக்குநர் கோபி நயினார் 
இயக்குநராக மேடை ஏற 14 வருடங்கள் போராட வேண்டி இருக்கு – ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன் உருக்கம்
‘செம்பியன் மாதேவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி இசை ஏ.டி.ராம் அமைத்திருக்கிறார். சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி நடனக் காட்சிகளை வடிவமைக்க மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஜெ.கார்த்திக் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 10 அம தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “செம்பியன் மாதேவி காதலி உள்ள பிரச்சனைகள் பற்றி ஆவேசமாக பேசுகிற படம் என்பது டிரைலரை பார்த்தால் தெரிகிறது. அரசியலில் பேசும் எழுச்சி வசனம் வேற, காதல் அந்த மாதிரி கிடையாது. காதலிச்சி இருந்தா தானே உங்களுக்கு தெரியும். திருமாவளவன் காதலிக்காமல் இருக்கிறாரே. காதலித்து இருக்கலாம், கைகூடாமல் இருக்கலாம். அது உணர்வு அதை மிஸ் பண்ணிட்டாரோ என்று நான் பீல் பண்றேன். காதலிச்சு பார்த்தால் தான் அந்த உணர்வும், பிரச்சனையும் தெரியும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படம் அமைய வாழ்த்துகள். யாருக்கும் மிகப்பெரிய மேக்கப் கிடையாது. ஜோடனை கிடையாது, நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பாக இருக்கிறது. குத்துப்பாடலை கூட அழகியலோடு எடுத்திருக்கிறார்கள், இந்த மாதிரி படம் பார்த்து ரொம் நாளாச்சு.
சமீபகாலமாக இரண்டு மூன்று படங்கள் நல்லபடியாக ஓடுகிறது, ஆனால் தியேட்டர்காரர்கள் தான் அந்த படங்களுக்கான வருமானத்தை கொடுக்கவில்லை, என்ற புகார் வருகிறது. அதேபோல், இதுபோன்ற சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இதை மாற்ற வேண்டும்,  சினிமா சுதந்திரமாக இயங்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது. படைப்புகளுக்கு சுதந்திரம் இருக்கும், படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இருக்கும், அவர்களை வாழ்த்துவதற்கு சுதந்திரம் இருக்கும், ஆனால் அந்த படைப்புகள் சென்று சேர்வதற்கு சுதந்திரம் இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நல்ல விசயங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று இதுபோன்ற படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கலாக இருக்கிறது.  ஒடிடியும் இவர்களை திரும்பி பார்ப்பதில்லை. தியேட்டரை நம்பி மட்டுமே சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள், அவர்களுக்காக அரசாங்கத்திடம் திருமாவளவன் அவர்கள் பேச வேண்டும், என்று விரும்புகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சிறு சிறு தியேட்டர்கள் கட்ட வேண்டும், அப்படி செய்தால், இந்த படம் யாருக்கு சென்று சேருமோ அவர்களுக்கு சேரும் என்பதை இங்கே தெரிவித்துக்கொண்டு, படத்தில் பங்காற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி” என்றார்
இயக்குநர் கோபி நயினார் பேசுகையில், “இப்போது இருக்கும் இந்திய சூழ்நிலையில் இந்த படம் மிக முக்கியமான படமாக நான் கருதுகிறேன். காதலிப்பதே புரட்சி செய்வதற்கு தான், புரட்சி செய்வதே காலிலிப்பதற்காக தான். புரட்சி முடிந்த பிறகு  காதல் பண்ண போறோம். அந்த காதலில் பிரச்சனை வந்தால், காதல் செய்வவதை நிறுத்திவிட்டு புரட்சி செய்வோம். புரட்சி முடிந்தால் பிறகு மீண்டும் காதல் செய்ய வேண்டியது தான். ஆக, மனிதனுக்கு எப்போதெல்லாம் காதல் வருகிறதோ அப்போதெல்லாம் புரட்சி செய்வோம், எப்போதெல்லம் புரட்சியில் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காதல் செய்வோம். காதலை தவிர மனித குலத்துக்கு வேறு எந்த வேலையும் இல்ல என்பது தான் உண்மை, அதை தான் இந்த படம் ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறது, படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
படத்தின் இயக்குநரும் இசையமைப்பாளருமான லோக பத்மநாபன் பேசுகையில், “2010 ஆம் ஆண்டு இதே மேடையில் நான் உதவி இயக்குநராக பணியாற்றிய படத்திற்கு பாடல் எழுதியதன் மூலம் ஏறினேன். இப்போது இயக்குநராக இந்த மேடையில் ஏறுவதற்கு சுமார் 14 வருடங்கள் ஆகிவிட்டது.  நெகிழ்ச்சியான தருணம் இது. இசை, பாடல்கள், தயாரிப்பு என அனைத்தையும் நானே செய்தது குறித்து நிருபர்கள் கேட்டார்கள், நான் இந்த கதையை வைத்துக்கொண்டு நிறைய தயாரிப்பாளர்களை அணுகினேன், ஆனால் யாரும் படம் பண்ண முன்வரவில்லை. நான் தமிழ்நாடு இசை கல்லூரியில் நான்கு ஆண்டு இசை பட்டய படிப்பு படித்தவன். இசை கல்லூரியில் சேரும் போதே நான் உதவி இயக்குநராக சேர்ந்து விட்டேன். இசை படிப்பை முடிப்பதற்குள் நான்கு படங்களில் இணை இயக்குநராகவே பணியாற்றி விட்டேன். அதனால் தான் நான் இயக்குநராகும் போது இசையமைக்கவும் முடிந்தது. படத்தின் பாடல்கள் இந்த அளவுக்கு வருவதற்கு விடி மியூசிக் சிஇஓ அரவிந்த் சார் தான். அவர் அற்புதமான பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். வா.கருப்பன் அவர்களும் சிறந்த பாடல்களை எழுதி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய மொசக்குட்டி உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
தொல்.திருமாவளவன் பேசுகையில், “லோகபத்மநாபன் பேசும்போது 2010-ல் உதவி இயக்குநராக இந்த மேடைக்கு வந்தேன், 14 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக வந்திருக்கிறேன், என்றார். எப்படி எழுதுகிறார், இயக்குகிறார், நடிக்கிறார், இசையும் அமைக்கிறார், என்று கேள்வி எழுப்பினார்கள், அதற்கு நான்  விடை சொல்கிறேன், என்று கூறி தனது போராட்ட வாழ்வை பகிர்ந்துக்கொண்டார். இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிடுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  படத்தை முழுமையாக பார்த்தால் தான் கருத்து சொல்ல முடியும், ஆனால் எனக்கு முன்னால் பேசியவர்கள் படம் பற்றி கோடிட்டு பேசியிருக்கிறார்கள். காதலை பற்றியும் பேசி அரசியலில் ஆதாயம் தேட முடியும் என்பதை நாம் தமிழ்நாட்டில் தான் பார்த்திருக்கிறோம். சினிமாத்துறையில் கூட நாடகக்காதல் என்பதை பற்றி பேசி வணிகம் தேட  பார்க்கிறார்கள், அவர்கள் அரசியல்வாதிகளை விட கெட்டிக்காரர்கள். என் பெயரை சொல்லியும் பிழைக்கிறார்கள், நானும் பிழைத்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுகிறேன். நானும் ஒரு மூலதன பொருளாக அவர்களுக்கு இருக்கிறேன், என்று தோழர்களிடம் நான் பகிர்ந்துக்கொள்வதுண்டு.
காதல் என்பது காலம் காலமாக பேசப்பட்டு வருகின்ற உயர்ந்த, சிறந்த சொல். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மனித குலத்தை வழி நடத்தும் வலிமை மிக்கது காதல். யாரும் சொல்லி வருவதில்லை, தூண்டியும் வருவதில்லை, அது ஒரு இயல்பான உணர்வு. அதனால் தான் ஆர்.வி.உதயகுமார் காதலித்து பார்த்தால் தான் காதலை புரிந்துக்கொள்ள முடியும் என்று சொன்னார். பாடம் எடுத்து புரிய வைக்க முடியாது, காதலுக்கு ஆசிரியர்கள் கிடையாது, அது இயல்பான உணர்வு. எல்லாம் உயிரிடத்திலும் இருக்கிறது, மனித குலத்தில் மட்டும் அல்ல, உயிரினங்களுக்கு இருக்கும் பொதுவான உணர்வு காதல். ஆனால், நூறு விழுக்காடு அனைவரும் காதலித்து தான் திருமணம் செய்கிறார்கள், என்றால் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் நடக்கிறது, அதற்கான வாய்ப்பு உருவாகிறது. உணர்வு இருக்கும் அது கனியாது, மலராது, அந்த சூழல் உருவாகாது. அதனை ஏதோ திட்டமிட்டு, யாரோ சொல்லி, டீ சர்ட் போட்டால், ஜீன்ஸ் போட்டால், கூலிங்கிளாஸ் போட்டால், பெண்கள் மயங்கி விடுவார்கள், அவன் பின்னாள் போய்விடுவார்கள், என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு, அதற்கு நாடகக்காதல் என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள். அப்படி எல்லாம் இருக்க முடியாது. காதல் காதல் தான். நாடகம் செய்து எல்லாம் யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது. நாம் பெற்ற பிள்ளைகளை நாம் அவமதிப்பதாக, இழிவு செய்வதாக ஆகிவிடும். யாரையோ பழிப்பதற்காக, இழிவுப்படுத்துவதற்காக நாம் பெற்ற பிள்ளைகளை கொச்சைப்படுத்த கூடாது. நம் வீட்டு பெண் பிள்ளைகளை கொச்சைப்படுத்துவதை ஒரு போதும் நியாயப்படுத்த கூடாது.
காதல் என்பது இயல்பானது என்றால் இயற்கை என்று பொருள், இயற்கையான உணர்வு, வலிந்து உருவாக்க முடியாது. ஒருவர் சொல்லி ஒருவர் செய்யவும் முடியாது. திரைப்படங்களாக இருந்தாலு சரி, நாவல் எழுதுவதாக இருந்தாலும் சரி, எந்த படைப்பாக இருந்தாலும் சரி, தவறான தோற்றத்தை உருவாக்க கூடாது, இது தான் என் கருத்து, வேண்டுகோள். காதலுக்கு ஏன் எதிர்ப்புகள் வருகிறது?, எல்லாம் நாடுகளிலும் காதலுக்கு எதிர்ப்பு உண்டா என்றால் உண்டு. அதன் பரிமாணங்கள் நாடுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவை பொருத்தவரை இங்கு நிறுவப்பட்டுள்ள ஒரு கருத்தியல், காதலை மறுக்கிறது. இனக்கலரவம், சாதி பிரச்சனை வரக்கூடும் என்பது தான் அந்த கருத்தியல். சாதி விட்டு சாதி திருமணம் செய்தால், ஒரு சாதியின் தூய்மை கலங்கம் ஏற்பட்டு விடும், எனவே திருமணத்தை ஒரு சாதிக்குள்ளே செய்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு சாதிக்கும் இடையிலான பிரச்சனை. சாதியிலே உயர்ந்த சாதி என்று கருதப்படுகின்ற பிரமாணர்கள் தனி தனி சாதியினராக தான் இருக்கிறார்கள். அங்கேயே சாதி கலப்பு ஏற்படக்கூடாது என்பது இருக்கிறது. ஆகவே காதல், ஆர்.வி.உதயகுமார் சொல்வது போல், சாதி, இனம் தாண்டியது என்பது கருத்தியல். சாதி விட்டு சாதி திருமணம் செய்தால், வெட்டுவேன் என்று சொல்கிறார்கள். அதற்காக அமைத்த சட்டம் தான் மனுஷ்ரீதி, அதன் கருத்து தான் காதலுக்கு எதிர்ப்பாக நிற்கிறது. நாடகக்காதல் என்ற புதிய சொல்லை கொண்டு வந்து நிற்கிறது. படைப்பாளர்கள் அதை தாண்டி சிந்திக்க வேண்டும். பிற்போக்கான கருத்தியலில் சிக்கிக்கொள்ள கூடாது. அப்படிப்பட்ட ஆளுமை உள்ளவர்களால் தான் சிறப்பான படைப்பை கொடுக்க முடியும்.  ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு இருக்க கூடாது. என்றோ ஒருவன் ஆண்டிருக்கிறான், ஆனால் நீ இன்று பிச்சை தான் எடுத்துக்கொண்டிருக்கிறாய், பிறகு என்ன ஆண்ட பரம்பரை. அதனால், உன் பிள்ளைகளுக்கு ஆண்ட பரம்பரை, அப்படினு சொல்லிக்கொடுக்காமல் அறிவியலை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதை தான் செம்பியன் மாதேவி படமும் சொல்கிறது.
ஆனவக்கொலை என்பது போலியான கெளரவம். தன்மானம் தான் உண்மையான கெளரவம். அதை எப்போது பெற முடியும் என்றால் வாழ்க்கை பற்றிய, மனித குலத்தை பற்றிய, அறிவியல் பற்றிய தெளிவு வரும் போது தான் அது நமக்கு புலப்படும். செம்பியன் மாதேவி டிரைலர் தான் பார்த்திருக்கிறோம். அதில் வரக்கூடிய காட்சிகள் காதலுக்கு எதிர்ப்பு சாதியை சுற்றி இருக்கிறது என்பது தெரிகிறது. இதை ஏன் நாம் திரும்ப திரும்ப பேச வேண்டும், திரும்ப திரும்ப படமாக எடுக்க வேண்டும், திரும்ப திரும்ப பேசுவதால் தான் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும். சாதி பிரச்சனை பற்றி இங்கு பேசக்கூடாது, ஆனால் சாதி பிரச்சினை இங்கு இருக்கிறது. இந்திய மண்ணை பொருத்தவரை ஒரு மனிதனை சாதி உலவியல் அவனை அறியாமல் வழி நடத்துகிறது. ஆகவே, செம்பியன் மாதேவி போன்ற படங்கள் இங்கு திரும்ப திரும்ப எடுக்கப்பட வேண்டும், இதைபற்றி நாம் திரும்ப திரும்ப பேச வேண்டும். இது வன்முறைக்கானதல்ல, பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கானது. ஒரு பிரச்சனையை பற்றி பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும். ஆக, இந்த பிரச்சனைகள் பற்றி பேசுவதை தொடர்ந்துக்கொன்ண்டு தான் இருப்போம், இப்படிப்பட்ட படங்களை திரும்ப திரும்ப எடுத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூறி, இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் வாழ்த்து கூறி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
#sembianmadevi
Comments (0)
Add Comment