சென்னை:
சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக முதல் தமிழ் தயாரிப்பு ‘எல் ஜி எம்’. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படமாக, இப்படத்தின் கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், பின்னணி இசையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி.
ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாணும், இவானாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நன்கு பழகிய பிறகு இரண்டு வருட காதலுக்குப் பிறகு கல்யாணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். இரண்டு வருடம் கழித்து, அவர்களுடைய திருமணத்திற்கு இரு தரப்பு பெற்றோர்களும் எந்தவித பிரச்சனையும் இன்றி சம்மதிக்கிறார்கள். ஹரிஷ் கல்யாண் தன் அம்மா நதியாவை அழைத்துக் கொண்டு, இவானாவை பெண் பார்க்க அவரது வீட்டிற்கு வருகிறார். இரு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை பற்றி பேசி தேதி நிச்சயிக்கும் நேரத்தில், இவானா ஹரிஷ் கல்யாணை தனியே அழைத்து சென்று திருமணத்திற்கு பிறகு உன் அம்மாவுடன் இணைந்து வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை. அம்மா நதியாவை விட்டு பிரிந்து தனியாக என்னுடன் வாழவேண்டும் என்று சொல்கிறார், அப்பா இல்லாமல் அம்மா நதியாவின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ஹரிஷ் கல்யாண், அம்மாவை தனியாக விட்டு நாம் வாழ்வது நினைத்து பார்க்க கூட முடியாது, என்று சொல்கிறார்.
இதனால் இவர்களுடைய திருமணத்தில் பிரச்சனை ஏற்பட, இந்த பிரச்சனைக்கு தீர்வாக இவானா ஒரு ஐடியா சொல்கிறார். திருமணத்திற்கு முன்பு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு ட்ரிப் போகலாம், அப்போது வருங்கால மாமியாருடன் பழகிப்பார்த்து அவரை எனக்கு பிடித்து இருந்தால் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம், இல்லை என்றால் திருமணம் வேண்டாம்,..என்கிறார். இவானா சொன்ன ஐடியாவுக்கு ஒப்புக் கொண்டு, அதற்காக கர்னாடகாவில் கூர்க் என்ற இடத்திற்கு இருவரது குடும்பத்தையும் ஒன்றிணைத்து அழைத்து செல்கிறார் ஹரிஷ் கல்யாண். அங்கு நதியா மற்றும் இவானா இருவரும் பேசி பழகி ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்களா? ஹரீஷ் கல்யாண், இவானாவை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் ‘எல்.ஜி.எம்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் யதார்த்தமாக நடிக்க முயற்சி செய்து இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். முதல் பாதியில் காதலி இவானாவா… அம்மா நதியாவா என்று யோசிக்கும் காட்சிகளிலிலும், யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பத்தில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலிலும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்படி படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இது ஒரு காதல் கதை என்பதால் அதிகமாக நடிப்பதற்க்கு வாய்ப்பு அதிகமாக இல்லை.
கதாநாயகி இவானா துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். தனது முகபாவனைகளை மாற்றி நடிக்கும்போது, நடிப்பில் தனித்தன்மை தெரிகிறது. ஒரு ஐடியா சொல்லவா… என்று சொல்லும் காட்சிகளில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து கைத்தட்டுகிறார்கள்.
அம்மாவாக நடித்திருக்கும் நதியா, முதல் பாதியில் வயதான ஒரு அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது அம்மாவாகவும் அழகு தேவதை போல காட்சியளிக்கிறார். ஒரு தாயின் உணர்வை அழுத்தமாக மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார். இவானாவுடன் கோவா சென்றபோது, அங்கு மது அருந்தும் பார் ஒன்றில் நடனம் ஆடும் காட்சியில் அசத்தி இருக்கிறார்.
யோகிபாபு தனது கெளண்டர் காமெடிகளை சிதறவிட்டு, பலமாகவே படத்திற்கு கைகொடுத்திருக்கிறார். ஆர் ஜே விஜய், ஆங்காங்கே காமெடி செய்து ரசிக்க வைக்கிறார்.இயக்குநர் வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், விநோதினி, வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக சில காட்சிகளில் வந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் காட்சிகளை மட்டும் இன்றி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக காட்டியியிருக்கிறார். முக்கியமாக நதியாவை அம்மாவாக மிக இளமையாக காட்டி அழகு சேர்த்திருக்கிறார். இயக்குனரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை..கேட்கலாம், பின்னணி இசையையும் மிக சிறப்பாக அமைத்துள்ளார்.
மாமியார்-மருமகள் பிரச்சனை எல்லாம் குடும்பங்களிலும் இருப்பவை என்பதால், கண்டிப்பாக மக்கள் இந்த படத்துடன் எளிதாக புரிந்துக் கொள்ள முடிகின்ற மாதிரி இப்படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம்.றது. அதே சமயம், இந்த பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் சொல்லாமல், மாமியாரை புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுத்து போவதே தீர்வாக இருக்கும் என்பதை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி சொல்லாமல் சொல்லியிருப்பதையும் பாராட்டலாம்..படம் முழுதும் நகைச்சுவையில் நம்மை சிரிக்க மற்றும் ரசிக்க வைத்துள்ளார் ரமேஷ் தமிழ்மணி.
அனைவரும் குடும்பத்தோடு சென்று ‘எல்.ஜி.எம்’ படத்தை ரசிக்கலாம்.
திரைநீதி செல்வம்.