சென்னை:
கல்லூரியில் படிக்கும் போதோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் கை கூடாமல் தோல்வி அடைந்து பிரிந்து போன நிலையில் வெவ்வேறு திருமணம் செய்த காதலர்கள் அவர்களின் திருமணத்திற்கு பிறகு சந்தித்துக்கொண்டால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுத்திருக்கும் படம் தான் “தீராக் காதல்”.
இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவதா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ‘அதே கண்கள்’ ‘பெட்ரோமாக்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய ரோகன் வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருந்தாலும் இப்படத்தின் கதையை புதிய கோணத்தில் படமாக்கி இருக்கிறார். இப்படத்தின் கதையை பொருத்தவரையில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்தாலும் அந்த காதல் தோல்வியில் முடிகிறது. பிறகு ஜெய் சிவதாவை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் சூழ்நிலையில் ஜெய் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.
இந்த சமயத்தில் தன் அலுவலக விஷயமாக மங்களூர் செல்கிறார் ஜெய். . அவர் செல்லும் அதே ரயிலில் எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்தவுடன் தனது பழைய நினைவுகளைப் பற்றி இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது தான் திருமணம் செய்து கொண்ட கணவன் மிகவும் கொடுமைப்படுத்துவதாக வேதனைப்படுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். . அப்போது ஆறுதல் கூறும் ஜெய் அவரை சமாதானம் செய்கிறார். தனது பழைய காதலன் ஜெய்யின் ஆறுதல் வார்த்தைகள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மன நிம்மதியை ஏற்படுத்துகிறது. .
இந் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கொடுமைக்கார கணவனிடம் இருந்து விவாகரத்து பெறுகிறார். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு ஜெய்யை காதலிக்க தொடங்குகிறார். இதனால் மன வேதனையடைந்த ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷிடம் தனக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை இருக்கும்போது எப்படி உன்னை நான் காதலிக்க முடியும் என்று அவரை விட்டு விலகி நிற்கிறார். இதனால் ஒன்றும் புரியாமல் தவித்து நிற்கும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்தாரா? இதனால் ஜெயின் குடும்பம் என்னானது? என்பதுதான் “தீராக் காதல்” படத்தின் மீதி கதை.
நடிகர் ஜெய் இப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டிருக்கிறார். இதுவரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். இயக்குனர் எண்ணத்தையும் கதையின் களத்தையும் புரிந்து கொண்டு மிக சிறப்பான முறையில் அப்பாவித்தனமாக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைத்து காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் இப்படத்தில் முழுக்க முழுக்க இளமையுடன், உடை, தோற்றம் என அழகான ஒரு காதல் கதையில் காதலியின் தத்ரூபமான நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜெய்யின் மனைவியாக நடித்திருக்கும் சிவதா, ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் அம்ஜன் கான், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ, பேபி வரித்தி விஷால் என படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் வந்தாலும், அனைவரும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் கதாபாத்திரங்களை அழகாக காட்டியிருப்பதோடு, அவர்களின் உணர்வுகளையும் சிறப்பாக காட்சிபடுத்தி இருப்பது பாராட்டத்தக்கது. சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நம் செவிக்கு மகிழ்ச்சியூட்டும் அளவிற்கு இருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாணியில் பல இளைஞர்கள் தங்களது பழைய காதலியை சந்திக்கும்போது என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை காதலுடன் விறுவிறுப்பாக கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன். திரைக்கதையை மிக சிறப்பாக எழுதி, வித்தி யாசம் காட்டி ரசிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரத்தை வில்லத்தனமாக அழகாக வடிவமைத்து அனைவரையும் கவனம் பெற வைத்தி இருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘தீராக் காதல்’ அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் காதல்!
திரைநீதி செல்வம்.