Take a fresh look at your lifestyle.

“கழுவேத்தி மூர்க்கன்” திரை விமர்சனம்!

133

சென்னை:

அருள்நிதி நடிப்பில், ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிப்பில், சை. கௌதம ராஜ் இயக்கத்தில் உருவான படம் “கழுவேத்தி மூர்க்கன்”.

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சாதி அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் “கழுவேத்தி மூர்க்கன்” அந்த  கிராமத்தில்  கீழத்தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்பும், மேலத்தெருவில் வசிக்கும் கதாநாயகன் அருள்நிதியும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பாசத்துடன்  உயிருக்கு உயிராக பழகுகிறார்கள். இவர்களில் அருள்நிதி மிகவும் கோபக்காரர். சந்தோஷ் பிரதாப் மிகவும் பொறுமையானவர். மென்மையான மனம் கொண்டவர். இந்நிலையில் அந்த  கிராமத்தில் உள்ள அரசியல்வாதிகள் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அவர்களுக்கு  எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்கிறார். அவருக்கு உறுதுணையாக அருள்நிதி எதற்க்கும் துணிந்தவராக செயல்படுகிறார். இந்நிலையில் அந்த ஊரில் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜசிம்மன் கட்சி தலைமையில் உள்ளவர்களிடம்  தனது செல்வாக்கை காட்ட அந்த  கிராமத்தில்  பொதுக்கூட்டம் நடத்த முயல்கிறார். அப்போது சந்தோஷ் பிரதாப் இருக்கும் இடத்தில் ராஜசிம்மனின் ஆட்கள்  போஸ்டர் ஒட்ட முயலும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இந்த சூழலில் திடீரென்று சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்படுகிறார். கொலைப் பழி அருள்நிதி மீது விழுகிறது. காவல்துறை அருள்நிதியை தேட, அவரோ சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை தேடி அலைகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாபை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து பழி வாங்கினாரா? அருள்நிதி மீது ஏற்பட்ட  கொலைப்பழி நீங்கியதா? என்பதுதான் “கழுவேத்தி மூர்க்கன்” படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் கதா நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி, கரடு முரடான பெரிய முறுக்கு மீசையுடன், மூர்க்கதனமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க முரட்டு ஆசாமியாக துள்ளிக்குதிக்கிறார். சண்டைக் காட்சிகளில் அத்தனை பேரையும் அடித்து துவைக்கிறார். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் சரி தன்னால் அதை மிக சரியாக கையாள முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்படத்தில் நடிப்பால் மிரட்டியிருக்கிறார்.  காதல் காட்சிகளில் தன் காதலியுடன் கொஞ்சும்போது நடிப்பில் விளையாடி இருக்கிறார். இனிமேல் இவருக்கு அதிகமாக அதிரடி ஆக் ஷன் படத்தில் நடிப்பதற்க்கு வாய்ப்புக்கள் வரும் என்பதில் ஐயமில்லை.

பூமியாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மிக சிறப்பாக தனது கேரக்டரை உனர்ந்து நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  அவரது உடல் மொழி அந்தக் கதாபாத்திரத்தோடு மிகவும் சிறப்பாக அமைந்ததால் படத்திற்கு பக்கபலம் என்றே சொல்லலாம்..  மிகவும் மென்மையான  கேரக்டரில் சிறப்பாக  நடித்து அசத்தியுள்ளார்.

இப்போதுள்ள இளைஞர்ளுக்கு  மத்தியில் துணிச்சலான பெண்ணாக தனது அழகால் அனைவரையும் கவர்ந்து நடித்து வரும் துஷாரா விஜயனின் இளமையுடன் கூடிய திமிரான நடிப்பு ரசிக்க வைக்கிறது.  அருள்நிதியுடன் அவரது காதலை  ஆழமாக காட்டி கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை மயங்க வைக்கிறார்.

மற்றொரு நாயகியாக வரும் சாயா தேவி, கண்ணீர் விட்டு மனதில் பதிந்திருக்கிறார். அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் முனிஸ்காந்த்.

யார் கண்ணன், ராஜசிம்மன் இருவரும் வழக்கமான வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். சரத் லோகித்சவா, பத்மன், சாயா தேவி என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறது.

டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. குறிப்பாக முதல் பகுதி முதல் பாடலும், இரண்டாம் பகுதி முதல் பாடலும் மிக சிறப்பு. ஸ்ரீதர் ஒளிப்பதிவு ஆக்ஷன் படத்துக்கு உண்டான காட்சிகளை கண்முன் நிறுத்தி மிக சிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்.

சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகளால் எப்படி ஒரு சமுதாயம் பாதிக்கப்படுகிறது என்பதை நல்ல திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சை. கவுதம் ராஜ்.இரு வேறு சமுதாய மக்களை பற்றிப் பேசும் கதை என்பதால், சரியாக முறையில், இப்படத்தின் திரைக்கதையை கையாண்டு மிக சிறப்பாக  படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராஜ். அவருக்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் “கழுவேத்தி மூர்க்கன்” பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

திரைநீதி செல்வம்.