சென்னை:
எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் தொடர் ‘அயலி’. இதில் அறிமுக நடிகை அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி, டிஎஸ்ஆர்.தர்மராஜ், லல்லின், காயத்ரி, தாரா, மேலோடி, பிரகதீஷ்வரன், ஜென்சன்,சிறப்பு தோற்றத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில்வேல், பகவதிபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். ‘அயலி’ படத்தின் திரைக்கதை, வசனத்தை வீணை மைந்தன், சச்சின் ஆகியோருடன் சேர்ந்து முத்துக்குமார் ஏழுதி இயக்க, 8 எபிசோடுகள் அடங்கிய ‘அயலி’ ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.இசை-ரேவா, எடிட்டிங்-கணேஷ் சிவா, ஒளிப்பதிவு-ராம்ஜி, பிஆர்ஒ எய்ம் சதீஷ்.
வீரபண்ணை கிராமத்தில்அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.பருவமெய்தியவுடன் பெண் குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டியவர்கள் என்று பழமையான பழக்கவழங்கங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கிராமம், இந்த பாரம்பரிய மரபை கடைபிடிக்காவிட்டால் கிராம தெய்வமான அயலி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்., அந்த வீரபண்ணை கிராமத்தில் தமிழ்செல்வி என்ற பெண் இவற்றை தகர்த்தெறிந்து டாக்டராக வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் பருவமெய்தியதை யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார். இதனால் அவளுக்கு பல பிரச்சனைகள் வருகிறது. தனது இலக்கை அடைய போராடும் தமிழ்செல்வி டாக்டருக்கு படித்து வென்றாரா? இல்லையா? என்பதே ‘அயலி’. இணைய தொடரின் மீதி கதை!
தமிழ்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் அபிநயஸ்ரீ, 15 வயது கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். துடுக்கான கேள்விகள், போராட்ட குணம் கொண்ட இளம் மாணவியாக படிக்க துடிக்கும் ஆசையை நிறைவேற்ற எந்ந முடிவையும் எடுக்க துணியும் தைரியம் நிறைந்த பெண்ணாக நடிப்பில் அசத்தியுள்ளார். எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து தொடர் வெற்றி பெறும்போது அந்த கதாபாத்திரமாகவே நம் மனதில் பதிந்து விடுகிறார்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அப்படி ஒரு அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வில்லனாக லிங்கா மேனரிசம் செய்து நடிக்கும்போது, ஒரு சிறந்த வில்லன் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார். அம்மாவாக மிகப்பெரிய விசயத்தை அநாயசமாக மறைக்கும் மகளைப் பார்த்து வியந்து ரசிக்கும் அனுமோல், அப்பா தவசியாக அருவி பாலா, திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், தோழி மைதிலியாக லல்லின், ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா, செல்வியாக மேலோடி, முருகனாக பிரகதீஷ்வரன், சேகராக ஜென்சன் ஆகியோர் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் லஷ்மி பிரியா சந்திரமெளலி மற்றும் பக்ஸ் பகவதி வரும் காட்சிகள் கூட கவனம் பெறும் வகையில் நடித்து இருக்கின்றனர்.
ரேவாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்ற பயணித்திருப்ப தோடு, பல காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராம மக்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகியன அச்சு அசலாகப் பதிவாகியிருக்கின்றன.
வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்கள். பெண் கல்விக்கு ஆதரவாக பேசினாலும், அதை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அவற்றுக்கு தீர்வும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார். சமுதாயத்துக்குத் தேவையான கருத்தை சுவாரசியமான திரைக்கதையில் சொல்லி யிருக்கிறார். வசனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கின்றன.மையக்கருத்தைக் காட்டிலும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகள் முற்காலத் தமிழ்நாட்டு வாழ்வியலைச் சொல்லிச் செல்கின்றன. முக்கியமாக பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி இயக்கி இருக்கும் இயக்குனர் முத்துக்குமாருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் “அயலி” நம் அனைவரையும் சிந்திக்க, ரசிக்க வைக்கும் இணைய தொடர்!
திரைநீதி செல்வம்.