சென்னை:
ஒரு தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் பத்திரிகையாளரான திரிஷா வேலை பார்க்கிறார். இந்த சூழ்நிலையில் தனது அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அண்ணன் மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கும் திரிஷா அதைச் சரிசெய்யப் போக அது உலக அளவிலான இன்னொரு பெரும் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. ஆன்லைன் பத்திரிகை நிருபரான திரிஷா, உலக அளவிலான பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். திரிஷாவுக்கு வந்த பிரச்சனை என்ன? அந்த பிரச்சனையிலிருந்து திரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதை காதலோடு உலக அரசியலை சேர்த்து சொல்லும் படம்தான் ‘ராங்கி’.
தையல் நாயகி என்ற கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக நடித்திருக்கும் திரிஷா, யாருக்கும் அடங்காத குணம், தைரியமான பேச்சு, பயம் அறியாத முகம், நடை உடை பாவனைகளில் துணிச்சல் என பல காட்சிகளில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கும் திரிஷா, தன் அழகால் மிளிர்கிறார். புல்லட் மோட்டார் சைக்கிளில், அவர் பயணிப்பதும். துனிஷியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவில் த்ரிஷாவின் செயல்கள் அவரை முழுமையான ஆக்ஷன் கதாநாயகியாக்கியிருக்கிறது. இனி தொடர்ந்து ஆக்ஷன் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரலாம்.
சுஷ்மிதா என்ற பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனஷ்வரா, முகநூல் போன்ற மீடியாவின் மோகத்தால் வாழ்க்கையை இழக்கும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் கதையை நகர்த்தி செல்லுகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்று தெரியாமல் அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்மகேந்திரன் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.
ஆலிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் சிறப்பாக நடித்திருந்தாலும், எல்லாவற்றையும் இழந்து போராடும் ஒரு நபர் போராட்டக்களத்தில் அவருடைய பணிகளுக்கு நடுவில் சமூகவலை தளத்தில் இயங்குகிறார் என்பது நம்ப கூடிய மாதிரி இல்லை. ஆனால் அவரது நடிப்பை பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் ஒவ்வொரு காட்சிகளையும் மிக பிரம்மாண்டமாக உஸ்பெகிஸ்தானின் மலைகள் சூழ்ந்த பகுதிகளை அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
சி.சத்யாவின் இசையில் கபிலன் எழுதியுள்ள ‘பனித்துளி’ பாடல் வரிகள் காதலின் வலிகளை தனது வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் கபிலன்.
உள்ளூரில் உள்ள பிரச்சனையை மையமாக எடுத்துக்கொண்டு, உலக பிரச்சனையை பற்றி சொல்லியிருக்கும் இயக்குநர் சரவணன், தன் சிறப்பான வசனங்கள் மூலம் சமுதாய சீர்கேடுகளை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தி யிருக்கிறார். நாட்டில் நடக்கும் அதிகமான குற்ற செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அதை ஒழிக்கின்ற வகையில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும், என்று சொல்லியிருக்கும் இயக்குநர் சரவணன், தற்போதைய பத்திரிகையாளர்கள் அப்படிப்பட்ட பணிகளை செய்வதில்லை என்று வேதனையுடன் குறைபட்டிருக்கிறார். இருந்தாலும் படத்தை தொய்வில்லாமல் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில் அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம் ‘ராங்கி’
திரைநீதி செல்வம்.