Take a fresh look at your lifestyle.

“விஜயானந்த்” திரைப்பட விமர்சனம்!

171

சென்னை:

விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரித்திருக்கும் ‘விஜயானந்த்’  திரைப்படத்திற்கு கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா. இதில் நிஹால் ராஜ்புத், ஸ்ரீஅனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி ரவிச்சந்திரன், அனிஷ் குருவில்லா, வினயா பிரசாத், சிரி பிரஹலாத், பாரத் போபண்ணா, நிஹால், ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைன் ஷெட்டி, அர்ச்சனா கோட்டிகே ஆகியோர் நடித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜயானந்த் ரோட்லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சங்கேஸ்வரின், வாழ்க்கைக் கதையை  யதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்கள். பிரிண்டிங் அச்சகத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல், ஒரு லாரியுடன் தனது தொழிலை தொடங்கி பின்னர் அது நான்கு லாரிகளாக பெருகி, தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலதிபாராக உயர்ந்திருக்கும் விஜய் சங்கேஸ்வர், சரக்கு போக்குவரத்து துறையோடு பத்திரிகை துறையிலும் மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் சந்தித்த வேதனைகள், சோதனைகள், எதிர்ப்புகள், இன்னல்களை மற்றும் ஏமாற்றங்களை சமாளித்து எப்படி முன்னேற்ற பாதைக்கு சென்று சாதனை செய்தார். அவர் கர்னாடகாவில் எப்படி தொழிலதிபர் ஆனார் என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லி இருப்பதுதான் ‘விஜயானந்த்’  திரைப்படத்தின் கதை.

விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஹால், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அதில் வரும் தடைகளை கடந்து செல்லும் விதம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும்படி இருக்கிறது. அவரது சிறந்த நடிப்பு பாராட்டுபடி இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான வி ஆர் எல் பிரைவேட் லிமிடெட் உரிமையாளராக,  படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நிஹால்,.தொழிலில் போட்டி பொறாமை வருமிடத்தில் திகைத்து பின் அதை எதிர்கொள்ளும் விதம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

விஜய் சங்கேஸ்வரின்  மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத், நல்ல குடும்பத்தலைவிகளுக்கு எடுத்துக்காட்டாக, தன் நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

விஜய் சங்கேஸ்வரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர் வேடத்தில் நடித்திருக்கும் பாரத் போபண்ணா, தனது கேரக்டரை உணர்ந்து,  தொழிலை  முன்னேற்ற பாதைக்கு கொண்டு  செல்லும்போது அவரது நடிப்பு பிரமாதம்.

ஆனந்த் நாக், வினயா பிரசாத், அர்ச்சனா கொட்டிகே, பத்திரிகையாளராக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து நடிகர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

கீர்த்தன்பூஜாரியின் ஒளிப்பதிவில் அந்தக்காலகட்டம் அப்படியே கண்முன் தெரிகிறது. அதற்கான வண்ணங்களையும் அவர் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவாக இருப்பதோடு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இருக்கிறது.

இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக் கதையை அனைவரும் ரசிக்கும்படி மட்டுமல்ல அவரே ரசிக்கும்படி படமாக்கி நல்ல இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார் பெண் இயக்குனர் ரிஷிகாசர்மா. கர்னாடகத்தின்  பெரிய  தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை எல்லா மொழிகளிலும், அதாவது இந்தியா முழுவதும் அறிமுகம் செய்து வைத்த பெருமை இயக்குனர் ரிஷிகா சர்மாவிற்கே சேரும். அவருக்கு பெரிய பாராட்டைக் கொடுக்கலாம்.

மொத்தத்தில், ‘விஜயானந்த்’ படம் எல்லோரும் பார்க்க கூடிய ஒரு உன்னதமான படம்!

திரைநீதி செல்வம்..