Take a fresh look at your lifestyle.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

110
நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.
இதனிடையே லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும்
‘பொன்னியின் செல்வன் -முதல் பாகம்’ படத்தின் டீசர் வெளியாகி ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும், இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.