*”மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும்”- நடிகர் சரத்குமார்!*
*”மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும்”- நடிகர் சரத்குமார்!*
நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, ”நான் இத்தனை வருடங்களில் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர்களின் தனித்தன்மையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அந்த வகையில், புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு நடிகர்களை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறந்ததை கொடுப்பார். மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும். இதற்கு மேல் நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஆனால், பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
அதர்வா முரளி ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் புதிய உயரங்களைத் தொடுகிறார். இந்தப் படத்திலும் நிச்சயம் அவரது நடிப்பு பாராட்டப்படும். நடிகர் ரஹ்மானுக்கு இது வித்தியாசமான கதாபாத்திரம். இயக்குநர் கார்த்திக் நரேன் மீதான மரியாதை மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை எடுத்து நடிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தின் காரணமாகவே இதில் அவர் நடித்துள்ளார்” என்றார்.
கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ’நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.