நடிகை இனியாவின் புது துவக்கம்.. ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ
துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நடன பள்ளியை அறிமுகம் செய்த நடிகை இனியா
நடன பள்ளி தொடங்கிய நடிகை இனியா
தமிழ் திரையுலகில் “வாகை சூடவா” திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பலதுறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா புதிதாக நடன பள்ளி துவங்கியுள்ளார்.
ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ (AATREYA DANCE STUDIO) என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியை துவங்கி இருக்கிறார். நடிகை இனியாவின் குரு அருண் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோவின் இணை நிறுவனராக உள்ளார். துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை இனியா மற்றும் அவரது குழுவினர் இணைந்து சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதோடு விருது வழங்கும் நிகழ்ச்சியை பின்னணியில் இருந்து நேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார் இனியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இனியா ஷோ டிரைக்டர் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது. பல்வகை நடனங்களை கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், பிராண்டு அறிமுக நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள், பருவகால நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆத்ரேயா முழுவீச்சில் செயல்படுகிறது.
ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ குழுவினர் சமகால நடனம், செமி கிளாசிக்கல், திரைப்பட நடனம், ஃபியூஷன், கதக், ஒடிசி, அக்ரோபடிக், ஏரியல், தீ நடனம், லத்தீன் நடனம், ஹிப்ஹாப் நடனம் மற்றும் பண்பாட்டு கலை வடிவங்களை மிக நேர்த்தியாக ஆடும் வல்லமை பெற்றுள்ளனர்.
கலையை அதன் உண்மை வடிவத்தில் மக்களிடையே கொண்டுசேர்க்க ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ பாலமாக செயல்படும். கண்கவர் நிகழ்ச்சிகள், அழகிய கதைகளை கொண்டு சேர்த்தல் என ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ கலை நிகழ்ச்சிகள் தயாரிப்புக்கான ஒற்றை தளமாக விளங்குகிறது.
கலைத்துறையில் பிசியாக வலம்வரும் நடிகை இனியா, அதே துறை சார்ந்த விஷயங்களில் பல புதிய முன்னெடுப்புகளை செய்து வருகிறார். அதன்படி அவர் ஏற்கனவே அனோரா ஆர்ட் ஸ்டூடியோ பெயரில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஸ்டூடியோ துறையிலும் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இதன் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், இந்தியாவை தொடர்ந்து மலேசியாவிலும் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ துவங்கப்பட்டது. தற்போது இந்த ஸ்டூடியோ இந்தியா மற்றும் மலேசியா என சர்வதேச கிளைகளை கொண்டுள்ளது.
துபாயில் வைத்து ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ துவங்கப்பட்ட நிலையில், அங்கிருந்து இந்தியா திரும்பிய இனியா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் உருவாகும் “ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் “கேங்ஸ் ஆஃப் சுகுமாரகுருப்” படத்திலும், தமிழில் “சீரன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.